அரசு பஸ்கள் இனி தனியார் வசம்? சென்னையில் கைமாறுது 1,000!

Added : ஜூலை 09, 2022 | கருத்துகள் (65) | |
Advertisement
தமிழகத்தின் மிக பெரிய பொதுத் துறை நிறுவனமான போக்குவரத்து கழகத்தை, நஷ்டத்தில் இருந்து காப்பாற்ற, பஸ் போக்குவரத்தில் தனியாரை ஈடுபடுத்தும் முடிவுக்கு, தமிழக அரசு வந்துள்ளது. முதல் கட்டமாக சென்னையில், 1,000 பஸ்கள் இயக்கத்தை, தனியாரிடம் விட திட்டம் உள்ளது. படிப்படியாக தமிழகம் முழுதும், 25 சதவீத பஸ் போக்குவரத்து தனியார் மயமாக்கப்படும் என, தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து,
அரசு பஸ்கள் இனி தனியார் வசம்? சென்னையில் கைமாறுது 1,000!

தமிழகத்தின் மிக பெரிய பொதுத் துறை நிறுவனமான போக்குவரத்து கழகத்தை, நஷ்டத்தில் இருந்து காப்பாற்ற, பஸ் போக்குவரத்தில் தனியாரை ஈடுபடுத்தும் முடிவுக்கு, தமிழக அரசு வந்துள்ளது. முதல் கட்டமாக சென்னையில், 1,000 பஸ்கள் இயக்கத்தை, தனியாரிடம் விட திட்டம் உள்ளது. படிப்படியாக தமிழகம் முழுதும், 25 சதவீத பஸ் போக்குவரத்து தனியார் மயமாக்கப்படும் என, தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, போக்குவரத்து கழக வட்டாரங்கள் கூறியவதாவது: இலவச பயணம் உள்ளிட்ட சலுகைகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகளால் போக்குவரத்து கழகங்கள் ஆண்டுக்கு 42 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. கடுமையான நிதி சுமையால், அந்த நஷ்டத்தை ஈடுகட்ட முடியாமல், தமிழக அரசு தடுமாறி வருகிறது. சட்டசபையில் போக்குவரத்து துறை மானிய கோரிக்கை விவாதம் முடிவடைந்த நிலையில், நிதி அமைச்சர் தியாகராஜன், போக்குவரத்து கழகங்களை சீரமைப்பது குறித்து பேசினார்.



போக்குவரத்து சேவையில் தனியாரை அனுமதிக்க, அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதாகவும் தெரிவித்தார். அதையடுத்து, அப்பணியில் அரசு தீவிரமாக களம் இறங்கியுள்ளது. முதல் கட்டமாக, சென்னையில் 1,000 பஸ்கள் இயக்க, தனியாரை அனுமதிக்க ஏற்பாடு நடக்கிறது. படிப்படியாக தமிழகம் முழுதும் 25 சதவீத பஸ் போக்குவரத்து தனியார் மயமாக்கப்படும்.




இந்த நடைமுறையில் உள்ள முக்கிய அம்சங்கள்:


* தனியார் தங்கள் சொந்த முதலீட்டில் பஸ்களை வாங்குவர்.


* பஸ் டிரைவரை தனியார் தான் பணியமர்த்த வேண்டும்.


* பஸ் பராமரிப்பை தனியாரே மேற்கொள்ள வேண்டும்.


* ஒரு நாளைக்கு, 350 கி.மீ., துாரத்துக்கு மேல் செல்லும் வழித்தடம் என்றால், கி.மீ., அடிப்படையில் தனியாருக்கு சேவை கட்டணம் வழங்கப்படும்.


* டவுன் பஸ் வழித்தடங்களில், தனியாருக்கு நிலையான கட்டணம் வழங்கப்படும்.


* பஸ்களை இயக்குவது தனியார் என்றாலும், கண்டக்டர் நியமனத்தை அரசே மேற்கொள்ளும். தினமும் வசூலாகும் பஸ் கட்டணத்தை, அவர் அரசிடம் ஒப்படைப்பார்.


* பஸ் போக்குவரத்தை தனியார் மயமாக்கும்போது, அரசுக்கான மூலதன முதலீட்டு செலவு குறையும். டிரைவர் சம்பளம், வாகன பராமரிப்பு செலவு இருக்காது.


* போக்குவரத்து துறையில் நிலவும் ஊழியர் பற்றாக்குறை குறைந்து விடும்.




தனியார் மயமாக்கப்படுவதால், பொது மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள்:


* அரசு பஸ் போக்குவரத்து சேவையை விட, தனியார் பஸ் சேவை சிறப்பாக இருக்கும்.


* சரியான நேரத்துக்கு தனியார் பஸ் வரும்.


* சுத்தம், சுகாதாரத்துடன் பஸ்கள் பராமரிக்கப்படும்.



தமிழகம் முழுதும் 22 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுவதாக, அரசு கூறுகிறது. ஆனால், அதில், 5,000 பஸ்கள், பல்வேறு காரணங்களால் இயக்கப்படுவதில்லை. பல வழித்தடங்களில் போதிய வருவாய் இல்லாததே, அதற்கு முக்கிய காரணம். அத்துடன் மகளிர், போலீசார், மாணவர்களுக்கு இலவசம் உள்ளிட்ட கட்டணமில்லா சலுகைகளால், பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, போக்குவரத்து கழகங்களுக்கு தொடர் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.



பஸ் சேவையை தனியார் மயமாக்கும்போது, இலவச சலுகைகள் குறைக்கப்படும். இதனால், வீண் செலவு குறைந்து, மக்களுக்கு தரமான சேவை கிடைக்கும். சுற்றுச்சூழலை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என்பதற்காக, மின்சார பஸ்களை இயக்க, கடந்த ஆட்சியில் முடிவு எடுத்தனர். ஆனால், ஒரு பஸ்சின் விலை பல கோடி ரூபாய். அதை வாங்க போதுமான நிதி இல்லாததால், முதல் கட்டமாக மின்சார பஸ்களை இயக்க, தனியாருக்கு அனுமதி வழங்கலாம் என திட்டமிட்டனர்.



இதற்காக, மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்தனர். அந்த அடிப்படையில் தான், பஸ் போக்குவரத்தை தனியார்மயமாக்கும் முயற்சி எடுக்கப்படுகிறது. இதற்கு பொது மக்களிடம் வரவேற்பு உள்ளது. ஆனால், மொத்தமுள்ள 67 போக்குவரத்து துறை தொழிற்சங்கங்களில், 60 சங்கங்கள், இந்த முடிவை கடுமையாக எதிர்க்கின்றன. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


latest tamil news


'கட்டணம் உயரும்; வளர்ச்சி பாதிக்கும்'

அரசு போக்குவரத்து கழக ஊழியர் சம்மேளனம் - சி.ஐ.டி.யு., பொதுச்செயலர் ஆறுமுகநயினார் கூறியவதாவது:போக்குவரத்து இயக்கத்தில் தனியாரை ஊக்குவித்தால், தரமான சேவை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், சேவை அடிப்படையில் இயங்க வேண்டும் என்பதற்காகவே, போக்குவரத்து கழகங்கள் ஏற்படுத்தப்பட்டு, தமிழகத்தில் பஸ்கள் தேசியமயமாக்கப்பட்டன.தனியாரை அனுமதித்தால், சேவை துறையில் இருந்து மாறி, லாபத்துக்காக நடத்தப்படும் வியாபார நிறுவனமாகி விடும். தனியார் நிறுவனங்கள் நஷ்டம் என்றால், பஸ்களை இயக்க முன்வர மாட்டார்கள். மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் தான் பஸ்களை இயக்க முன்வருவர். அதனால், தற்போது போக்குவரத்து வசதி இருக்கும் பல இடங்களுக்கு பஸ் இல்லாத சூழல் ஏற்படலாம். அது மக்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். தனியார் பஸ் என்றால், கட்டணம் உயர்த்தப்படும்; சலுகைகள் பறிபோகும். கிராமப்புற வழித்தடங்களில் இயக்கப்படும் அரசு பஸ்களால், கிராமப்புற பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. தனியார் மயம் திட்டத்தால், வளர்ச்சியில் தேக்கம் உண்டாகும். இந்தியா முழுதும் 52 பொது போக்குவரத்து கழகங்கள், அரசு சார்பில் இயங்கி வந்தன. இப்போது, அது வெறும் ஏழாக குறைந்து விட்டன. -இவ்வாறு அவர் கூறினார்.



'திட்டமிட்டு முடக்கும் தி.மு.க.,வினர்'

பாரதிய மஸ்துார் சங்க பொதுச் செயலர், போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பு மாநில தலைவர் விமேஸ்வரன் கூறியதாவது:சேவை நிறுவனமாக இருக்கும் போக்குவரத்து கழக பஸ் இயக்கத்தில், தனியாரை முழுமையாக அனுமதிப்பது என்பது, இத்துறையை முழுமையாக அழிப்பதற்கு சமம். அதனால் தான், தொழில் சங்கங்கள் அரசின் முடிவுக்கு எதிராக உள்ளன.தனியார் மய முடிவுக்கு வந்த பின், அதை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகளை, தி.மு.க., தொழிற்சங்க நிர்வாகிகள் மறைமுகமாக செய்து வருகின்றனர்.பல வழித்தடங்களில் பஸ்கள் வருமானம் இன்றி இயங்குவது போன்ற நிலையை திட்டமிட்டு ஏற்படுத்துகின்றனர். பல்வேறு வழித்தடங்களில் டிரைவர், கண்டக்டருக்கு பணி ஒதுக்கீடு வழங்காமல், அவர்களை வீட்டுக்கு அனுப்பி விடுகின்றனர். அவர்களுக்கு, பணி ஒதுக்கப்படாத நாளுக்கான சம்பளமும் வழங்கப்படுவதில்லை. சென்னையில் மட்டும் நுாற்றுக்கணக்கான பஸ்கள் முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (65)

Karthik - Dindigul,இந்தியா
14-ஜூலை-202216:08:23 IST Report Abuse
Karthik // அரசு பஸ் போக்குவரத்து சேவையை விட, தனியார் பஸ் சேவை சிறப்பாக இருக்கும். சரியான நேரத்துக்கு தனியார் பஸ் வரும். சுத்தம், சுகாதாரத்துடன் பஸ்கள் பராமரிக்கப்படும்.// மேலேயுள்ள 3 போதும் அரசாங்கத்தின் இலட்சணத்தை சொல்ல. அரசு என்றால் தரம்குறைந்தது என்று முத்திரை குத்தும் அளவிற்கு அழுக்கடையச் செய்துள்ளார்கள். பினாமி பெயரில் தனியார் பேருந்துகள் மூலம் கட்டணத்தைக் கொள்ளையடிப்பதற்குத்தான் இந்த முயற்சி. காலக்கொடுமை.
Rate this:
Cancel
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
14-ஜூலை-202203:28:01 IST Report Abuse
Srivilliputtur S Ramesh இந்த நிலைமைக்கு யார் காரணம் ? ஒவ்வொரு பஸ் டெப்போவிலும், முப்பது, நாற்பது பேர்கள், தாங்கள் குறிப்பிட்ட தொழிற்சங்கத்தைச்சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு, வேலைக்கே போவதில்லை. ஆனால் , சம்பளத்தை மட்டும் கறாராக வாங்கிக்கொள்கின்றனர். தொழிலாளர் சங்கங்கள், போக்குவரத்து கழகங்களை சீரழித்து விட்டன.இதற்கு கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களே பொறுப்பு.... மத்திய அரசு,எல்லாவற்றையும் தனியார் மயமாக்குகிறது என்ற பொய்யான குற்றச்சாட்டை சுமத்துகின்றனர் இடதுசாரிகள். ஆனால், நஷ்டத்தில் இயங்கும் துறைகளை சரி செய்து, செப்பனிட, அவைகளில் உள்ள பொதுத்துறை பங்குகளை கணிசமாக குறைத்து ( divestment ), அவைகளை விற்று லாபம் ஈட்டுவதே மத்திய அரசு கண்ட வழியாகும். இங்கு, தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது ? போக்குவரத்து துறையில் கடந்த முப்பது ஆண்டுகளாக வரலாறு காணாத ஊழல். அதனால், அது நஷ்டத்தில் ஓடுகிறது....இதற்கு "திராவிட அரசியல் அமைப்புகளே" பொறுப்பு... போக்குவரத்து துறையில் 75 % சதவிகிதம் தனியார் மயமானாலும் சரி தான்..."
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
13-ஜூலை-202215:56:38 IST Report Abuse
jayvee இந்த பிடி.. இன்னொரு 25 கோடி .. வாய திறப்பையா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X