வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : திருநெல்வேலியில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையம் உள்ளிட்ட மின் நிலையங்களில் இருந்து, மின்சாரம் வாங்கியதற்காக, மத்திய அரசின் நிறுவனங்களுக்கு, தமிழக மின் வாரியம், 4,210 கோடி ரூபாய் நிலுவை தொகை வைத்துள்ளது.
மத்திய அரசின் இந்திய அணுமின் கழகத்திற்கு, திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்திலும்; கர்நாடகா மாநிலம் கைகாவிலும் அணுமின் நிலையங்கள் உள்ளன.துாத்துக்குடியில் மத்திய அரசின் என்.எல்.சி., எனப்படும், நெய்வேலி நிலக்கரி நிறுவனம், தமிழக மின் வாரியத்துடன் இணைந்து, என்.டி.பி.எல்., என்ற பெயரில், கூட்டு அனல்மின் நிலையம் அமைத்துள்ளன.
தமிழகத்திற்கு, கூடங்குளம் மின் நிலையத்தில் இருந்து, தினமும் 1,152 மெகா வாட் மின்சாரமும், கைகாவில் இருந்து 224 மெகா வாட்டும், என்.டி.பி.எல்., மின் நிலையத்தில் இருந்து 410 மெகா வாட் மின்சாரமும் ஒதுக்கப்பட்டுள்ளது.அவற்றுடன், திருவள்ளூரில் உள்ள வல்லுார், செங்கல்பட்டில் உள்ள கல்பாக்கம் உள்ளிட்ட மத்திய மின் நிலையங்களில் இருந்து வழங்கப்படும் மின்சாரத்தை, மத்திய அரசின், 'பவர்கிரிட்' நிறுவனத்தின் மின் வழித்தடங்கள் வாயிலாக, தமிழக மின் வாரியம் பெறுகிறது.
|
மின் தேவையை பூர்த்தி செய்வதில், மத்திய அரசின் மின்சாரம், மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மின் கொள்முதல் ஒப்பந்தப்படி மின்சாரம் வாங்கியதற்கான பணத்தை, 45 - 60 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.ஆனால், மின் வாரியம், குறித்த காலத்தில் பணத்தை வழங்குவதில்லை. அதன்படி, மே மாத நிலவரப்படி, கூடங்குளம் மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வாங்கியதற்கு, 2,250 கோடி ரூபாயும், கைகாவில் மின்சாரம் வாங்கியதற்கு, 493 கோடி ரூபாயும், இந்திய அணுமின் கழகத்திற்கு, மின் வாரியம் நிலுவை வைத்து உள்ளது.
என்.டி.பி.எல்., மின் சாரம் வாங்கியதற்கு, 221 கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளது. பவர் கிரிட்டின் துணை நிறு வனமான, சி.டி.யூ., எனப்படும், 'சென்ட்ரல் டிரான்ஸ்மிஷன் யூடிலிட்டி'க்கு 1,246 கோடி ரூபாயை, மின் வாரியம் நிலுவை வைத்துள்ளது.எனவே, நிலுவை தொகையை விரைந்து வழங்க கோரி, மத்திய அரசின் நிறுவனங்கள், மின் வாரியத்தை வலியுறுத்தி உள்ளன.