சென்னை : காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடர்பாக, அதிகாரிகளுக்கு அரசு புது உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். இந்த நீர் முறையாக திறக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக்களை, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மத்திய அரசு அமைத்து உள்ளது.
இதில், மத்திய நீர்வள ஆணையம், தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில நீர் வளத் துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இதற்கிடையே, காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில், புதிய அணை கட்டும் முயற்சியில், கர்நாடக அரசு இறங்கியுள்ளது. இதற்கு தமிழகம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
![]()
|
தமிழகத்தின் எதிர்ப்பால், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் மூன்று முறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் இக்கூட்டத்தை நடத்த, ஏற்பாடு நடந்து வருகிறது. மேகதாது அணை குறித்த விவாதம் நிகழ்ச்சி நிரலில் இடம் பெறும் வாய்ப்புள்ளது. எனவே, அணையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, இக்கூட்டத்தில் எடுத்துரைப்பதற்காக, தமிழக அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், நிகழ்ச்சி நிரலில் மேகதாது அணை பற்றிய விவாதம் நடக்கும் என கூறப்பட்டிருந்ததாலே, ஆணைய கூட்டத்தை புறக்கணிக்கும்படி, அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.