வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வேலூர்: 75வது சுதந்திர தின விழா கொண்டாடி வரும் வேளையில் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களை மறக்காமல் நாம் கவுரவிக்க வேண்டும் என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டார்.
வேலூர் கோட்டையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தமிழககவர்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி வேலூர் சிப்பா புரட்சி நினைவு தினம் விழாவில் பங்கேற்று, முன்னாள் படை வீரர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் அவர் தம் குடும்பத்தார், என்சிசி மாணவர்கள் பொதுமக்களிடையே பேசினார்.
கவர்னர் பேசியதாவது: தமிழ் பழமையான சக்தி வாழ்ந்த அழகான மொழி. தமிழர்களின் கலாச்சாரம் முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டின் விடுதலைக்கு முக்கிய பங்கு தமிழகம் வகிக்கிறது.
வேலூர் கோட்டையில் நடந்த போராட்டத்தை ஆங்கிலேயர்கள் கலகம் என்று கூறுகின்றனர். ஆனால் இது புரட்சியாகும். வேலூர் சிப்பாய் புரட்சி இந்தியாவின் சுதந்திரத்திற்கான போராட்டத்தின் வித்தாகும். இப்போராட்டத்தில் இந்திய வீரர்கள் நூற்றுக்கானவர்கள் தன்னுடைய உயிரை தியாகம் செய்தனர். அவற்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். வருகின்ற 75வது சுதந்திர தினத்தன்று நாம் சுதந்திரத்துக்காக உயிர்நீத்த அனைவரையும் நினைத்து பார்க்க வேண்டும் .

இந்தியா முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியாவின் இன்ப காலம் எனும் வளர்ச்சியை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். இன்னும் 25 ஆண்டுகளுக்கு பின்பு 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது கல்வி பொருளாதாரம் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளில் ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் நாம் வளர்ந்திருக்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒரு குடும்பம் என்ற எண்ணத்துடன் இருக்க வேண்டும். அதற்காக பிரதமர் நரேந்திர மோடி திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.
நாம் கூர்ந்து நோக்கினால் இந்திய சமமாக வளராமல் ஏற்றத்தாழ்வுடன் வளர்ந்துள்ளது இது தமிழகத்திலும் உள்ளது. தமிழகத்தில் கல்வி பல மாவட்டங்களில் பின்தங்கியும் பல மாவட்டங்களில் வளர்ந்து உள்ளது. உலக நாடுகளின் இந்தியாவின் மீதான பார்வை முற்றிலுமாக மாறுபட்டுள்ளது. இந்தியாவை பொருளாதாரத்தில் சூப்பர் பவர் நாடாக வளர்ந்து வரும் நாடாக பிற நாடுகள் நம்மை பார்க்கின்றன. வேலூர் ஒரு வீர பூமி. ஒவ்வொரு நாடுகளுக்கும் பிரதமர் செல்லும் போது அங்கு அவர்கள் பிரதமரை வரவேற்கும் விதைத்து பார்க்கும்போது அனைவருக்கும் தெரியும். உலக நாடுகளின் பார்வை இந்தியாவின் மீது மாறுபட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் இருந்து இந்தியாவின் ராணுவத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் தங்களை அர்ப்பணித்து பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு வானமே எல்லை என்ற நிலை உள்ளது எனவே இளைஞர்கள் நாட்டிற்காக பாடுபட வேண்டும். நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட ஒவ்வொரு வீரர்களையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு கவர்னர் பேசினார்.
சிப்பாய் புரட்சி நினைவு தினம்
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1806ம் ஆண்டு மதராஸ் படைக்கு தளபதியாக இருந்த சர் ஜான் கிரேடேக் என்பவர் , வேலூர் கோடையில் இருந்த இந்திய சிப்பாய்களுக்கு பல்வேறு அடக்கு முறைகளை கையாண்டார். அதில் குறிப்பாக இந்திய சிப்பாய்கள் காதில் கடுக்கன் அணியக்கூடாது ,சமய சின்னங்களை உடலில் அணிய கூடாது,தாடியை அகற்றிவிட்டு மீசையை வைத்துக்கொள்ள வேண்டும். பசுந்தோளால் செய்யப்பட தொப்பிகளை அணிய வேண்டும், மதக்குறிகளை நெற்றியில் இடக் கூடாது. உள்ளிட்ட பல்வேறு அடக்கு முறைகளை கொண்டு வந்தார். இதனால் இந்திய சிப்பாய்கள் மன உலச்சளுக்கு ஆளாக்கப்பட்டனர். இதன் காரணமாக ஆங்கிலேயர் ஆட்சியை வீழ்த்த வேண்டும் என திட்டமிட்டு வேலூர் கோட்டையில் 1806 ஆண்டு ஜூலை 10ம் நாள் நள்ளிரவில் ஆங்கிலேய வீரர்களை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.
அப்போது இருதரப்பினருக்கும் ஏற்பட்ட போரில் 900 க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். பின்னர் இந்த கிளர்ச்சி நாடு முழுவதும் பரவியது ,வேலூர் கோட்டையில் ஏற்பட்ட, இந்த முதல் சிப்பாய் புரட்சியே, நம் நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட முதல் சம்பவம் என வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. இச்சம்பவம் நினைவாக வேலூர் கோட்டை எதிரே 1998ம் ஆண்டு தமிழக அரசால் நினைவு தூண் அமைக்கப்பட்டு ஆண்டு தோறும் ஜூலை 10ம் நாள் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.