சென்னை: சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி காலையில் திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூடியது. இதில் எதிர்கட்சி தலைவர் பழனிசாமியை தற்காலிக பொதுச்செயலாளராக்குவது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஆனால் கட்சியின் பொருளாளராக இருக்கும் பன்னீர் செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் அங்கு முகாமிட்டுள்ளார்.
அ.தி.மு.க., அலுவலகத்தில் பன்னீர்செல்வம்
இதற்கிடையில் பரபரப்பான சூழலில் கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் காலை 8 மணியளவில் புறப்பட்டு அ.தி.மு.க., அலுவலகம் சென்றார். இதனையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கட்சி அலுவலகம் முன்பு இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். பலர் காயமுற்றனர். மேலும் பழனிசாமி ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகம் நோக்கி படையெடுத்திருப்பதால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. கட்சி அலுவலகத்திற்குள் தற்போது பன்னீர்செல்வம் இருக்கிறார். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
பழனிசாமிக்கு கோர்ட் சாதகம் !
இதற்கிடையில் இன்று காலை பொதுக்குழுவை நடத்தலாம் என 9 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. சென்னை வானகரத்தில் பொதுக்குழுவில் பழனிசாமி ஒற்றைத்தலைமைக்கு மகுடம் சூட்டப்படும்.
இரு தரப்பினர் மோதல் !
காலையில் தீர்ப்பு வெளியாகும் முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களுடன் வீட்டில் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து அவர் தனது பிரசார வாகனத்தில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் நோக்கி புறப்பட்டார். இதனையடுத்து கட்சி அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
ஏற்கனவே அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் தலைமையில் தொண்டர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அங்கு வந்த நிலையில் இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். கம்பு மற்றும் கல் மூலம் தாக்கினர். இதில் இரு தரப்பினரும் சிலர் காயமுற்றதாக கூறப்படுகிறது.இதனால் பெரும் பதட்டம் நிலவுகிறது.
இதற்கிடையில் சென்னை வானகரத்தில் பழனிசாமி தலைமையில் முதல்கட்டமாக செயற்குழு கூடியது. கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை தற்காலிக பொதுச்செயலாளராக்க பரிந்துரைப்பது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பதிலுக்கு பதில் நீக்கம்
பொதுக்குழு கூட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கும் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், பிரபாகரன், மனோஜ்பாண்டியன் ஆகியோர் நீக்கப்படும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தகவல் குறித்து ஓ. பன்னீர்செல்வத்திடம் கேட்ட போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
நான் கழக சட்டப்படி ஒன்றரை கோடி தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். எடப்பாடி பழனிசாமிக்கோ, முனுசாமிக்கோ யாருக்கும் உரிமை இல்லை. இவர்களுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் என்னை கட்சியில் இருந்து நீக்குவதாக தன்னிச்சையாக அறிவித்ததை அடுத்து இவர்கள் இருவரையும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நான் நீக்குகிறேன். கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால் மேலும் சட்டரீதியில் நான் போராடி வெற்றி பெறுவேன். இவ்வாறு அவர் கூறினார்.