வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு-''இலங்கை பார்லிமென்ட் வரும் 20ல் கூடி புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும்,'' என, சபாநாயகர் மகிந்த யாபா அபெய்வர்தனே தெரிவித்தார். அண்டை நாடான இலங்கையில் அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலக கோரி லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் தலைமறைவாகினர்.
வரும் 13ல் பதவியை ராஜினாமா செய்வதாக, சபாநாயகர் வாயிலாக அதிபர் கோத்தபய தகவல் தெரிவித்தார். புதிய அரசு அமைந்ததும் பதவி விலகுவதாக பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், அனைத்து கட்சியினரையும் உள்ளடக்கிய புதிய அரசு அமைப்பது குறித்து அனைத்து கட்சிக் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.நாளை, அதிபர் கோத்தபய ராஜினாமா செய்ததும்,15ல் பார்லி.,யை கூட்டி அதிபர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.
![]() |
19ல் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு, புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலை 20ல் நடத்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக, சபாநாயகர் அபெய்வர்தனே தெரிவித்தார். 'அனைத்து கட்சியினரை உள்ளடக்கிய இடைக்கால அரசு அமைந்ததும், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, புதிய அமைச்சர்களிடம் பொறுப்புகளை ஒப்படைப்பர்' என, பிரதமர் அலுவலகம் நேற்று அறிவித்தது.இதற்கிடையே, 'அதிபர் கோத்தபய ராஜபக்சே 13ல் பதவி விலகுவார்' என, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேற்று அறிவித்தார்.
இவரது அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில், அதிபர் கோத்தபய அலுவலகத்தில் இருந்து அறிக்கை வெளியானது. அதில், 'அதிபரின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், சபாநாயகர் வாயிலாக மட்டுமே வெளியிடப்படும்' என, கூறப்பட்டு இருந்தது.அதிபருக்கும், பிரதமருக்கும் இடையே கடந்த ஒரு மாதமாக கருத்து வேறுபாடு நிலவி வருவதாகவும், அதன் காரணமாகவே, அதிபர் அலுவலக தரப்பு இப்படியொரு அறிக்கையை வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.
லட்சக்கணக்கான போராட்டக்காரர்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகைக்குள் நுழைவதற்கு முன், கடற்படை உதவியுடன் அவர் வெளியேறி, கடற்படைக்கு சொந்தமான இடத்தில் தங்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.அங்கிருந்து இரண்டு ஹெலிகாப்டர்களில் அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர், கொழும்பு நகரில்உள்ள கட்டுநாயகா விமானப் படை தளத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.அங்கிருந்து துபாய் தப்பி செல்ல திட்டமிட்டுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, கோத்தபய ராஜபக்சே, அண்டை நாட்டுக்கு தப்பி விட்டதாக நேற்று மாலை பரபரப்பான செய்திகள் வெளியாகின. இலங்கை சபாநாயகரே இதை தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, சபாநாயகர் அபெய்வர்தனே கூறுகையில், ''அதிபர் கோத்தபய நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக தவறுதலாக கூறிவிட்டேன். அவர் இன்னும் இலங்கையில் தான் இருக்கிறார்,'' என்றார்.
அதிபர் கோத்தபய பதவி விலகும் வரை அதிபர் மாளிகையை விட்டு வெளியேற போராட்டக்காரர்கள் மறுத்துவிட்டனர். எனவே, நிலைமையை சமாளிக்க தங்கள் படைகளை இந்தியா அனுப்ப உள்ளதாக இலங்கை ஊடகங்களில் இரண்டாவது முறையாக செய்தி வெளியானது. இதை, இலங்கைக்கான இந்திய துாதரகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.