''முதல்வர் ஸ்டாலின் எத்தனையோ பன்னீர்செல்வத்தை பிடித்தாலும், அ.தி.மு.க., நிர்வாகிகளை, தொண்டனை பிடிக்க முடியாது,'' என, அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்ட பழனிசாமி தெரிவித்தார்.
பொதுக்குழுவில் அவர் பேசியதாவது:
சில எட்டப்பர்கள் கட்சிக்கு களங்கம் கற்பித்தனர். இன்று எதிரிகளோடு உறவு வைத்துள்ளனர். அதை எல்லாம் அழிக்க, ஒற்றைத் தலைமை வேண்டும் என முடிவு எடுத்தீர்கள். அதை நிறைவேற்றி தந்துள்ளீர்கள். இடைக்கால பொதுச் செயலராக என்னை நியமித்துள்ளீர்கள். கட்சியில் கிளைச் செயலராக, என் பணியை துவக்கி, படிப்படியாக உயர்ந்துள்ளேன்.
பல முதல்வர்கள்
ஜெயலலிதாவிடம் நற்பெயர் பெறுவது சாதாரண விஷயமல்ல. ஜெயலலிதா எண்ண ஓட்டத்திற்கு தகுந்தவாறு, அந்த துறையில் முத்திரை பதிக்க வேண்டும். அவ்வாறு ஜெயலலிதா கட்டளையை ஏற்று, நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறையில், சிறப்பான திட்டங்களை செயல்படுத்தினேன். அதைத் தான் ஸ்டாலின், இன்று திறந்து வைக்கிறார். அ.தி.மு.க., ஆட்சி திட்டங்களை, 'ஸ்டிக்கர்' ஒட்டி ஸ்டாலின் திறக்கிறார். எவ்வளவோ கட்சிகள் உள்ளன.
எந்த கட்சியிலும் ஜனநாயக முறைப்படி பொறுப்புக்கு வர முடியாது. இந்தியாவிலேயே ஜனநாயக முறைப்படி இயங்கும் ஒரே கட்சி, அ.தி.மு.க., மட்டுமே.அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற அடிப்படையில், இடைக்கால பொதுச்செயலர் பொறுப்பை தந்துள்ளீர்கள். உங்கள் எண்ணத்தை நிறைவேற்றுவேன். தி.மு.க., ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்; வெற்றிக் கொடியை நாட்டுவோம். அது தான் நம் லட்சியம்.அ.தி.மு.க.,வை அசைக்கவோ, ஆட்டவோ எந்த கொம்பனும் பிறந்ததில்லை. ஏதோ விபத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்து விட்டது; ஸ்டாலின் முதல்வராக உள்ளார். அவர் பொறுப்பேற்று, 14 மாதங்களாகின்றன. தி.மு.க., ஆட்சியில் மக்கள் என்ன பலனை கண்டனர்? எந்த திட்டங்களை கொண்டு வந்தனர்?
அ.தி.மு.க., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருந்தது. இன்று தினம் கொலை, கொள்ளை, வழிப்பறி நடக்கிறது. இதற்கு மேலாக போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை; எது கிடைக்கிறதோ இல்லையோ, கஞ்சா எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. தமிழகம் போதைப்பொருள் உள்ள மாநிலமாக திகழ்கிறது. கிலோ கணக்கில் போதைப் பொருட்களை பறிமுதல் செய்கின்றனர்.
நாங்கள், 'ஆன்லைன்' சூதாட்டத்தை தடை செய்தோம். நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. அதை தடை செய்யக் கோரி, அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்துள்ளன. ஆனால், தி.மு.க., அரசு, செவிடன் காதில் ஊதிய சங்கு போல் உள்ளது.
மக்களைப் பற்றி கவலைப்படவில்லை; தன் வீட்டு மக்களைப் பற்றி மட்டும், முதல்வர் கவலைப்படுகிறார். இது குடும்ப ஆட்சி. ஒரு முதல்வர் அல்ல; குடும்பத்தில் பல முதல்வர்கள் உள்ளனர். அதிகாரிகள் என்ன செய்வது என தடுமாறுகின்றனர். இந்தியாவில் முதன்மை மாநிலமாக இருந்த தமிழகம், இன்று தலைகீழாக மாறுகிறது. எல்லாத் துறைகளிலும் ஊழல். கமிஷன், கலெக் ஷன், கரப்ஷன்.
பன்னீர் மீது குற்றச்சாட்டு
ஒற்றைத் தலைமை பிரச்னை துவங்கியதும், பல முறை பன்னீர்செல்வத்தை சந்தித்து, நம் கட்சியினர் பேசினர். 'நாம் சமாதானமாக இருக்கலாம் யார் வேண்டுமானாலும் பொறுப்புக்கு வரலாம்; ஒற்றைத் தலைமையாக இருக்க வேண்டும்' என்றனர். அதற்கு, அவர் இசைவு கொடுக்கவில்லை.
எதற்கெடுத்தாலும் அவர் விட்டுக் கொடுத்ததாகக் கூறுகிறார். அவர் எதையும் விட்டுத் தரவில்லை. நாங்கள் தான் விட்டுக் கொடுத்தோம். அவர் ஜெயலலிதாவுக்கும் விசுவாசமாக இல்லை. கடந்த, 1989ல் ஜெயலலிதா பொதுத் தேர்தலை சந்தித்தபோது, அவரை எதிர்த்து போட்டியிட்ட, வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு தலைமை முகவராக இருந்தார்.நான் முதல்வரானபோதும், உங்களில் ஒருவனாகத் தான் இருந்தேன். இப்போதும் உங்களில் ஒருவனாக இருந்து தான் செயல்படுவேன். எனக்கு கட்சி தான் உயிர். பன்னீர்செல்வம், தி.மு.க.,வினரோடு உறவு வைத்துள்ளார். கட்சி தலைவரே இப்படி உறவு வைத்திருந்தால், அந்த கட்சி எப்படி ஆட்சிக்கு வர முடியும்?
பொதுக்குழுவை கூட்ட நானும், அவரும் கடிதம் அனுப்பினோம். அதன்பின், பொதுக்குழு நடக்கக் கூடாது என நீதிமன்றம் செல்கிறார். உயர்ந்த பொறுப்பில் இருந்து கொண்டு, கட்சி கூட்டம் நடக்கக் கூடாது எனக் கூறிய ஒரே தலைவர் பன்னீர்செல்வம் தான். தி.மு.க., மாதிரி, அ.தி.மு.க., கம்பெனி அல்ல; பழனிசாமி இல்லை என்றால், சின்னசாமி பதவிக்கு வருவான்.
தி.மு.க.,வின் கைக்கூலி
பன்னீர்செல்வத்துக்கு எப்போதும் சுயநலம் தான். தனக்கு கிடைக்காத பதவி எவருக்கும் கிடைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர். நாம் தி.மு.க., ஊழலை சுட்டிக் காட்டுகிறோம்; மக்கள் விரோத ஆட்சி என குரல் கொடுக்கிறோம். பன்னீர்செல்வம் மகன், ஸ்டாலினை சந்தித்து, 'உங்கள் ஆட்சி சிறப்பான ஆட்சி' என்கிறார்.பொதுக்குழுவுக்கு வராமல், ரவுடிகளோடு தலைமை அலுவலகத்திற்கு போகிறார். அங்கு ரவுடிகளோடு நுழைந்து, ஜெயலலிதா அறையை கடப்பாறையால் உடைத்துள்ளார். ஆவணங்களை துாக்கிச் சென்றுள்ளார்.
இவரா கட்சிக்கு விசுவாசம் உள்ளவர்? சொந்த கட்சி அலுவலகத்தில் கொள்ளை அடிப்பவர் விசுவாசியா?எம்.ஜி.ஆர்., கொடுத்த கட்டடம். அதன் உள்ளே நுழைந்து, வன்முறையை துாண்டி விட்டு, அறையை உடைத்து பொருட்களை சேதப்படுத்தி அள்ளி சென்றுள்ளார். யாரோடு கூட்டு வைத்துள்ளார், யாரோடு உறவு வைத்துள்ளார் என்பது வெளிச்சத்திற்கு வந்து விட்டது. அவரது முகத்திரை கிழிந்து விட்டது. தி.மு.க.,வின் கைக்கூலியாக செயல்படுகிறார்.
ஸ்டாலின் எத்தனையோ பன்னீர்செல்வத்தை பிடித்தாலும், அ.தி.மு.க., நிர்வாகிகளை, தொண்டனை பிடிக்க முடியாது. எப்போது எங்கள் கட்சியினரை மோத விட்டீர்களோ, அப்போதே அழிவு காலம் ஆரம்பமாகி விட்டது.
போலீசில் புகார் கொடுத்தும், பாதுகாப்பு வழங்கவில்லை. பன்னீர்செல்வத்துடன் இணைந்து, தலைமைக் கழகத்தில் முதல்வர் நாடகம் ஆடிஉள்ளார். பழைய பழனிசாமி என நினைக்கிறீர்களா? நடக்காது. நான் என்றைக்கும் அஞ்சி வாழ்ந்ததில்லை. என் கருத்தை எங்கு
வேண்டுமானாலும் ஆணித்தரமாக பதிய வைப்பேன். அந்த துணிவை இறைவன் கொடுத்துஉள்ளான்.
மக்கள் விரோத ஆட்சி
எங்களை அழிக்க நினைப்பவர் அடியோடு அழிந்து விடுவர். பன்னீர்செல்வம், முதல்வர் ஸ்டாலின், திட்டமிட்டு, அ.தி.மு.க.,வை அழிக்க நினைக்கின்றனர். உங்கள் எண்ணம் காற்றோடு பறந்து விடும்.
அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரும். அதை எவராலும் தடுக்க முடியாது. இன்று மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சி எப்போது போகும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
லோக்சபா தேர்தலுடன் சட்டசபைக்கு தேர்தல் வர வாய்ப்புள்ளது. அ.தி.மு.க., வெல்லும். மீண்டும் ஜெயலலிதா அரசு அமையும்.இவ்வாறு பழனிசாமி பேசினார்.