ராமநாதபுரம் : ''ஆட்சியை பிடிக்க, தக்கவைக்க இலவசங்களை வாரி வழங்குகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் இலங்கையை போல நம்நாட்டிலும் பொருளாதர நெருக்கடி ஏற்படும்'' என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி எச்சரித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் வந்த தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியதாவது: நாட்டில் ஆட்சியை பிடிக்க, தக்கவைக்க இலவசங்களை வாரி வழங்குகின்றனர். இந்நிலைமை தொடர்ந்தால் இலங்கையை போல நம்நாட்டிலும் பொருளாதார நெருக்கடி ஏற்படும். மின்சார பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
இதுபோல விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் பேட்டரியில் இயங்கும் டிராக்டரை அறிமுகப்படுத்த வேண்டும். உடனடியாக இயற்கை விவசாயத்திற்கு மாறக்கூடாது. அதனால் உணவுப்பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது. படிப்படியாக மாற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தற்போதைய கல்வித்திட்டம் கறிக்கோழியை வளர்ப்பதுபோல உள்ளது.

தரமான கல்வியை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலத்தில் ஆக.,5 - 7 வரை வாழ்வுரிமை மாநாடு, வேளாண் கண்காட்சி, கருத்தரங்கு நடக்கிறது. இதில், மத்திய, மாநில அமைச்சர்கள், தமிழக எதிர்க்கட்சி தலைவர் பங்கேற்க உள்ளனர். இதில் தேவையற்ற இலவசங்களை தவிர்க்கவும், விவசாயிகள் வருவாய் இரட்டிப்பு செய்வது உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன்நிறுத்த உள்ளோம்.
பிற மாநிலங்களில் கள் இறக்க, விற்க தடையில்லை. கள் இறக்குவது, பருகுவது மக்களின் உரிமை. இதற்காக தொடர்ந்து போராடுகிறோம். கள் இறக்க தமிழக அரசு அனுமதி அளிக்கும் என்று நம்புகிறோம். இல்லையெனில் ஆக.,16ல் அசுவமேத யாகம் நடத்தப்படும். அப்போது குதிரையை தடுத்து நிறுத்தி கள் போதைப்பொருள் என நிரூபித்தால் அவர்களுக்கு ரூ.10 கோடி வழங்கப்படும். முல்லை பெரியாறு அணையில் 152 அடி நீரை தேக்க வேண்டும், பேபி அணை கட்ட வேண்டும்,'இவ்வாறு அவர் கூறினார்.