வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஓமலூர்: கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்து உள்ளதால், மேட்டூர் அணை நீர் மட்டம் 102 அடியை தாண்டிது.
கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான மைசூர், மாண்டியா, குடகு, ஹாசன், வயநாடு உள்ளிட்ட பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், கர்நாடகாவிலுள்ள ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகளுக்கு அதிக நீர்வரத்தால், அணை பாதுகாப்பு கருதி காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
72 ஆயிரம் கன அடி நேற்று(ஜூலை 11), கபினி அணையிலிருந்து வினாடிக்கு, 38 ஆயிரம் கன அடி, கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 72 ஆயிரத்து, 964 கன அடி என, மொத்தம், ஒரு லட்சத்து, 10 ஆயிரத்து, 964 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நேற்று காலை, 6:00 மணிக்கு வரத்தொடங்கிது. நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, வினாடிக்கு, 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 10:00 மணிக்கு வினாடிக்கு, 19 ஆயிரத்து, 500 கன அடியாகவும், மாலை, 6:00 மணிக்கு, 60 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்தது. இன்று காலை ஒரு லட்சம் கன அடியை தாண்டியது.

வெள்ளப்பெருக்கு ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்து, அங்குள்ள ஐந்தருவி, ஐவர்பாணி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. நடைப்பாதைக்கு மேல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மெயின் பால்ஸ்க்கு செல்லும் நடைப்பாதை பூட்டப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் காவிரியாற்றில் குளிக்க, பரிசல் இயக்க நேற்று முன்தினம் முதல் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை
இதற்கிடையே மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு, 90,873 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. மாலை நிலவரப்படி, அணையின் நீர் மட்டம், 102.10 அடியாகவும், நீர் இருப்பு, 67.59 டி.எம்.சி.,யாகவும் காணப்பட்டது. நேற்று மாலை முதல், 15 ஆயிரம் கனஅடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.