வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு: இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், கார் மற்றும் டூவீலர் வைத்துள்ளவர்கள், அதனை ஓரங்கட்டிவிட்டு சைக்கிளை பயன்படுத்த துவங்கி விட்டனர்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், எரிபொருள், உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் வாங்குவதற்கு பல கி.மீ., தூரம் வாகன ஓட்டிகள் வரிசையில் காத்திருக்கின்றனர். ஒரு சில நேரங்களில் 4 அல்லது 5 நாட்கள் கூட எரிபொருள் கிடைப்பதில்லை. இலங்கை பண மதிப்பில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.470க்கும், டீசல் ரூ.460க்கும் விற்பனை ஆகிறது.

தற்போதுள்ள சூழ்நிலையில், அவ்வளவு விலை கொடுத்து வாங்குவதற்கு மக்களால் முடியவில்லை. இதனால், பெரும்பாலானோர் தங்களது கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சைக்களிலில் பயணிக்க துவங்கி விட்டனர். தற்போது, வழக்கத்தை விட சைக்கிள் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்புபவர்கள் கூட சைக்கிளை கொண்டு வருகின்றனர். அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்கு சைக்கிளை பயன்படுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக தனியார் நிறுவனம் ஒன்றில் மனித வள மேம்பாட்டு துறை அதிகாரியாக பணியாற்றி வரும் லாக்லின் என்பவர் கூறுகையில், தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலை காரணமாக சைக்கிளை பயன்படுத்த துவங்கிவிட்டோம். பெட்ரோல் வாங்க முடியவில்லை. வரிசையில் நின்று பெட்ரோல் வாங்குவதற்கு போதிய நேரமும் இல்லை. வரிசையில் நின்றாலும் பெட்ரோல் கிடைக்குமா என்பதற்கு உறுதியும் இல்லை. இதனால், சைக்கிளில் செல்வது தான் சரியாக இருக்கும். பொருளாதார சிக்கல் துவங்கியதும், பெரும்பாலானோர், தங்களது சொந்த வாகனங்களை தவிர்த்துவிட்டு, பொது போக்குவரத்து மற்றும் சைக்கிளை பயன்படுத்த துவங்கிவிட்டனர் என்றார்.