மதுரை: 'மாவட்ட தலைநகரங்களில் ஜூலை 26ல் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் நடத்த உள்ளதாக' தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் செல்வம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு வழங்கும்போது மாநில அரசும் உயர்த்தி தருவதாக முதல்வர் அறிவித்தார். ஆனால் ஜன.1 முதல் 7 மாதங்களாக அகவிலைப்படி 3 சதவீதம் தரவில்லை. இம்மாதம் மீண்டும் அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவிக்க உள்ளது. எனவே அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டம் ரத்து, 4.5 லட்சம் காலியிடங்களை நிரப்புதல், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
முதல்வர் கொரோனா பாதிப்பில் இருந்து விரைந்து குணமடைய வேண்டும். கொரோனா காலத்தில் அவர் சிறந்த முதல்வர் என பெயரெடுக்க காரணம் சுகாதாரத்துறையே. அத்துறை உட்பட அனைத்து துறைகளிலும் அவுட்சோர்ஸிங் முறையில் பணி நியமனம் கூடாது. கோரிக்கையை நிறைவேற்றுவதாக தேர்தல் வாக்குறுதியில் முதல்வர் தெரிவித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்தபின் ஒன்றுகூட நிறைவேறவில்லை. இவற்றை வலியுறுத்தி ஜூலை 26ல் மாவட்ட தலைநகரங்களில் மாலைநேர தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம். ஆக.23ல் கோட்டை நோக்கி ஊர்வலமாக செல்ல உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.