வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பிரதமரை சந்தித்து பேச, பன்னீர்செல்வம் அனுமதி கேட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை துவக்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி வரும் 28ம் தேதி சென்னை வருகிறார்.அப்போது, அவரை சென்னையில் சந்தித்து பேச, அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டதாக, பழனிசாமி தரப்பால் அறிவிக்கப்பட்டுள்ள பன்னீர்செல்வம் அனுமதி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூறியதாவது: 'உட்கட்சி தேர்தல் வழியாக, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். எனவே, என்னை நீக்கியது செல்லாது.கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும், நாங்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷனில் பன்னீர்செல்வம் மனு வழங்கி உள்ளார்.
அதே போல, பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலர் தேர்வு; பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது போன்ற விபரங்களை வழங்கி, இரட்டை இலை சின்னத்தை தன் தரப்பு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என, பழனிசாமி மனு வழங்கி உள்ளார்.இடைக்கால பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்ட பழனிசாமிக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்திக் கொள்ள, தேர்தல் கமிஷன் வழங்கும் உத்தரவை பொறுத்துத் தான், டில்லி பா.ஜ., மேலிடத்தின் நிலைப்பாடு தெரியவரும்.பிரதமர் மோடிக்கு, பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார். ஜாதி ரீதியாக அ.தி.மு.க.,வை பழனிசாமி தரப்பினர் பிளவுபடுத்தி விட்டனர்.தனக்கு அ.தி.மு.க.,வில் கொடுக்கப்பட்டுள்ள நெருக்கடி குறித்தும்,பிரதமரிடம் முறையிட பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார்.
வரும் 28ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியை சந்தித்து பேச, பன்னீர்செல்வம் அனுமதி கேட்டுள்ளார். பிரதமர் மோடி அனுமதி தந்தால், பிரதமரிடம் பழனிசாமியின் நடவடிக்கைகள் குறித்து, பன்னீர்செல்வம் முறையிடுவார். இவ்வாறு அவர்கள்கூறினர்.
பிரதமருக்கு நன்றி தெரிவித்து, முன்னாள்முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார்.அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளராக அவர்எழுதியுள்ள கடிதம்:மத்திய அமைச்சரவை, 18 வயது முதல் 59 வயதுக்கு உட்பட்டோருக்கு, இலவசமாக கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போட அனுமதி அளித்ததற்கு நன்றி.அனைத்து அரசு தடுப்பூசி மையங்களிலும்,இந்தியாவின் 75வது சுதந்திர தின விழாவையொட்டி, இன்று முதல் 75 நாட்களுக்கு, கொரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படுவது, தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கையை அதிகரிக்கும். இந்திய மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்கும்.தகுதி உள்ள அனைத்து மக்களும் தாமாக முன்வந்து, பூஸ்டர் தடுப்பூசி போட்டு, கொரோனா இல்லாத இந்தியாவை உருவாக்குவர் என்ற நம்பிக்கை உள்ளது. இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடுவது,இந்திய மக்கள் மீது, தங்களுக்குள்ள அன்பு, கருணை மற்றும் அக்கறையை காட்டுகிறது; இது, வரவேற்கத்தக்கது. இந்த அறிவிப்புக்காக, அ.தி.மு.க., சார்பில் நன்றி. இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.
- நமது நிருபர் -