வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு 1.13 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. ஓரிரு நாளில் முழு கொள்ளளவான 120 அடியை எட்டிவிடும் என்பதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து, மேட்டூர் அணை நீர்வள ஆதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடகாவில், கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு 1,13,513 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 115.730 அடியாக உள்ளது. அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனையடுத்து மேட்டூர் அணை நீர் வள ஆதாரத்துறை சார்பில், காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதில், இன்னும் ஓரிரு நாளில் மேட்டூர் அணை முழு கொள்ளவான 120 அடியை எட்டிவிடும். இதனால், உபரி நீர் எந்த நேரத்திலும் வெளியேற்றப்படும். இதனால், காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதுடன், தங்களின் சொத்துக்கள் மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.