சென்னை:ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது 82 சதவீதமாக உயர்ந்துள்ளது. இருப்பினும், 'சர்வர்' தரம் உயர்த்தாமல் இருப்பதால், அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதாக பயணியர் புகார் தெரிவித்து உள்ளனர்.
கடந்த 2013ல் ரயில் நிலைய முன்பதிவு மையங்கள் வழியாக 51.27 சதவீதம் பேர் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தனர். இது, தற்போது 18 சதவீதமாக குறைந்துள்ளது. அதுபோல, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி.,யில் 48.73 சதவீதமாக இருந்த டிக்கெட் முன்பதிவு, தற்போது 82 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியால், மக்களிடம் மொபைல் போன், கணினி பயன்பாடு அதிகரித்து, இணையதளம், செயலி வழியாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது தான் இதற்கு காரணம். மீதமுள்ள 18 சதவீதம் பேர் ரயில் நிலைய முன்பதிவு மையங்களில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர்.
பயன்பாடு அதிகரிப்பால், பல்வேறு கூடுதல் வசதியுடன் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதள வசதியை மேம்படுத்தி வருகிறது. இருப்பினும், சர்வர் தரம் உயர்த்தாமல் இருப்பதால், இந்த இணைய தளத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதாக பயணியர் புகார் கூறுகின்றனர்.
இதுகுறித்து, பயணியர் சிலர் கூறியதாவது: ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், முன்பெல்லாம் ரயில் டிக்கெட் மட்டுமே முன்பதிவு செய்வர். தற்போது, ஆம்னி பஸ்கள், உணவுகள் ஆர்டர் செய்வது, ஓய்வு அறைகள், வீல் சேர் முன்பதிவு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெற பயன்படுத்துகின்றனர். இதனால், இந்த இணைய தளம் மெதுவாக இயங்குகிறது. சில நேரங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுகிறது.
குறிப்பாக, ஐ.ஆர்.சி.டி.சி., செயலியில் அடிக்கடி கோளாறு ஏற்படுகிறது. தத்கல் டிக்கெட் முன் பதிவின்போது, உடனடியாக டிக்கெட் முன்பதிவு செய்வதிலும் சிரமம் இருந்து வருகிறது. எனவே, ஐ.ஆர்.சி.டி.சி.,யின் சர்வர் வேகம் அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஐ.ஆர்.சி.டி.சி., உயர் அதிகாரிகள் கூறியதாவது:ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில், தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இருப்பினும், மொபைல் போன் வழியாக, டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, சில நிமிடங்களுக்கு கோளாறு ஏற்படுவதாக புகார் வந்துள்ளன. இதற்கு, டெலிகாம் நிறுவனங்களில் ஏற்படும் 'நெட்வொர்க்' பிரச்னையும் ஒரு காரணமாக இருக்கிறது. ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் சர்வர் வேகம், மேலும் அதிகரிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.