வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காஞ்சிபுரம் : ''சந்திரயான் -3 செயற்கை கோள் இரண்டு ஆண்டுகளில் விண்ணில் ஏவப்பட உள்ளது,'' என, இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தெரிவித்தார்.காஞ்சிபுரம் கா.மு.சுப்பராய முதலியார் அரசு மேல்நிலைப்பள்ளியில், தியாகம் போற்றுவோம் அமைப்பு சார்பில், 75வது சுதந்திரதின அமுதப் பெருவிழா நேற்று நடந்தது.
இதில் 75வது பிறந்தநாள் கொண்டாடும் இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணுபிள்ளை பங்கேற்று, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.அப்போது அவர் பேசியதாவது:இந்தியாவின் வளர்ச்சியும், வல்லரசாக கூடிய தன்மையும் அதிகமாகியுள்ளது. மாணவர்களின் அறிவுத்திறமை வளரும். இன்னும் ஐந்து ஆண்டுகளில் நம் நாடு வளர்ச்சியடைந்த நாடாக மாறும்.நம் நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 செயற்கை கோள்களை விண்ணில் ஏவி சாதனை படைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
![]()
|
அதன்படி, பள்ளி, கல்லுாரி மாணவர்களால் 75 செயற்கைகோள்கள் தயாரிக்கப்பட்டு விண்ணில் ஏவப்பட உள்ளது.அரசு பள்ளியில் தமிழில் படித்தவர்களுக்கு ராக்கெட் அறிவியல் பாடத்தை கற்று தருகிறோம். இதில், 500 பேர் பங்கேற்றனர். 110 பேரை தேர்வு செய்து ஹரிகோட்டாவுக்கு அழைத்து சென்று செயற்கைகோள் ஏவும் விதம் குறித்து நேரடியாக விளக்கம் அளித்தோம்.இதில் 25 மாணவர்களை தேர்வு செய்து ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்ல உள்ளோம்.
சந்திரயான்-3 செயற்கைகோள், இரண்டு ஆண்டுகளில் விண்ணில் ஏவப்படவுள்ளது. இதையொட்டி 'டிரயல், டெஸ்டிங்' நடந்து வருகிறது.சூரியனுக்கு, ஆதித்யா என்ற செயற்கைகோள், இஸ்ரோவில் இருந்து இரண்டு ஆண்டுகளில் விடப்பட உள்ளது. குறிப்பிட்ட துாரத்தில் இருந்து இந்த செயற்கைகோள் சூரியனை ஆய்வு செய்யும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, விழா அரங்கில் பல்வேறு பள்ளி மாணவர்கள் தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்திருந்தனர். கண்காட்சியை பார்வையிட்ட விஞ்ஞானி சிவதாணுபிள்ளை, அவை செயல்படும் விதம் குறித்து கேட்டறிந்து மாணவர்களை பாராட்டினார்.