வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீபெரும்புதுார் : நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, குன்றத்துார் தாலுகாவில் சேதமடைந்த கோவில்களை ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, ''இக்கோவில்கள் உடனடியாக சீரமைக்கப்பட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் தாலுகாவில் ஏராளமான கோவில்கள் பராமரிப்பின்றி, பாழடைந்து உள்ளன.குன்றத்துார் ஆதிதிருவாலீஸ்வரர் கோவில், அமரம்பேடு கரியமாணிக்க பெருமாள் கோவில், செரப்பணஞ்சேரி வீமீஸ்வரர் கோவில், நாவலுார் ஏகாம்பரநாதேஸ்வரர் கோவில், சிறுவஞ்சூர் திருவாலீஸ்வரர் கோவில், ஒரத்துார் பிரசன வெங்கடேச பெருமாள் கோவில் என ஆறு கோவில்கள் பெரிதும் சிதிலமடைந்து உள்ளன.இக்கோவில்களில், அறநிலையத் துறை சார்பில், ஒரு கால பூஜை கூட நடக்காமல் இருந்தது.
![]()
|
கிராம மக்கள் சார்பில் மட்டும் பூஜை நடந்து வந்தது.இதுகுறித்து, நம் நாளிதழில், 14ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சிறுகுறு தொழில்துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் நேற்று இந்த கோவில்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.காலை 8:00 மணிமுதல் 11:00 மணிவரை ஒவ்வொரு கோவிலிலும் நேரடியாக ஆய்வு செய்தனர். அப்போது, கோவில், கல்வெட்டில் உள்ள தகவல் குறித்து விளக்கம் கேட்டார்.
அலுவலர்களுக்கு உத்தரவு
கல்வெட்டு தகவல்களை படிக்க கூடிய தொல்லியல் அலுவலர் ஒருவர் உடன் அழைத்து வரப்பட்டார். அவர், கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்களை படித்து அமைச்சருக்கு விளக்கி கூறினார். உடன் வந்தவர்களும் கல்வெட்டில் உள்ள தகவல்களை ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.ஆய்வின் போது, ஹிந்து அறநிலைய துறை ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் வான்மதி, ஸ்ரீபெரும்புதுார் காங்., - எம்.எல்.ஏ., செல்வபெருந்தகை ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது, 'இந்த கோவில் நிலங்களை அளவீடு செய்து கணக்கீடு செய்ய வேண்டும். அடுத்த நுாறு ஆண்டுகளுக்கு இந்த கோவில்கள் பலமாக இருக்கும் வகையில், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்' என அறநிலையத் துறை அலுவலர்களுக்கு, அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார்.
ஆய்வுக்கு பின் சேகர்பாபு கூறியதாவது-:குன்றத்துார் தாலுகாவில் சேதமடைந்த கோவில்கள் குறித்து, நாளிதழ் செய்தி வாயிலாக அறிந்தேன். இந்த கோவில்கள் சீரமைக்கப்பட்டு, உடனடியாக திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.குடமுழுக்கு செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த கோவில்களில் சுற்று சுவர் அமைப்பது, சொத்துக்களை பாதுகாப்பது குறித்து கள ஆய்வு செய்துள்ளோம். கோவில் குளங்களும் பாதுகாக்கப்படும்.
திருப்பணிகள்
முதல்வர் ஸ்டாலின், ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த திருக்கோவில்களுக்கு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.80 கோவில்கள் இந்தாண்டு திருப்பணிக்கு எடுத்து கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதில், குன்றத்துார் கோவில்களையும் இணைத்து திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
தவிர, இந்தாண்டு 1,000 கோடி ரூபாய் செலவில், 2,000 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள உள்ளோம். கடந்த ஆட்சியில் ஒரு கோவில் திருப்பணிக்கு 1 லட்சம் ரூபாய் என நிதி ஒதுக்கீடு செய்திருந்தனர். தற்போது, 2 லட்சம் ரூபாயாக இந்த அரசு உயர்த்தியுள்ளது. ஆன்மிக அன்பர்கள் மகிழ்ச்சியோடு இருக்கும் வகையில், திருப்பணிகள் நடைபெறும்.கோவில் கல்வெட்டுகளில் உள்ள தகவல்கள் நவீன தொழில்நுட்பம் உதவியுடன் ஆவணப்படுத்த உள்ளோம். இதற்கென தொல்லியல் துறையில் தேர்ச்சி பெற்ற, அனுபவம் மிக்கவர்களை மண்டல வாரியாக பணியில் நியமித்து உள்ளோம்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.
குன்றத்துார் தாலுகா மணிமங்கலம் ஊராட்சியில், ௧,௦௦௦ ஆண்டுகளுக்கு மேல் பழமையான தர்மேஸ்வரர் கோவில் உள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் சிவன் சன்னிதி, அம்மாள் சன்னிதிகள் தனித்தனி கோவில் போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. ஆகம விதிப்படி இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து தொல்லியல் துறை சார்பில் 20 லட்சம் ரூபாயில் தர்மேஸ்வரர் கோவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 2019 ஜனவரியில் நிறைவடைந்தது. ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் தர்மேஸ்வரர் கோவில் கும்பாபிஷேம் நடத்தப்படாமல் உள்ளது. இதுகுறித்து, அமைச்சர் சேகர்பாபுவிடம் கேட்டபோது, ''மணிமங்கலம் தர்மேஸ்வரர் கோவில் விரைவில் ஆய்வு செய்யப்படும்,'' என்றார். அறநிலைய துறையினர் கூறுகையில், 'தொல்லியல் துறையினர் சீரமைப்பு பணிகளை செய்து முடித்ததாக இதுவரை எங்களுக்கு கடிதம் வழங்கவில்லை. பணிகள் நிறைவடைந்ததாக கடிதம் வந்த பின், கும்பாபிஷேகம் நடத்தப்படும்' என்றனர்.