சென்னை: கோவா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேர், சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
நாற்பது தொகுதிகளைக் கொண்ட கோவா மாநில சட்டசபைக்கு, ஜனவரியில் தேர்தல் நடந்தது.இதில், பா.ஜ., 20, காங்கிரஸ் 11, ஆம் ஆத்மி கட்சி, மஹாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி ஆகியவை தலா இரண்டு, கோவா பார்வர்டு கட்சி, புரட்சிகர கோவா கட்சி ஆகியவை தலா ஒரு இடம், சுயேச்சைகள் மூன்று இடங்களில் வென்றன. மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த பா.ஜ.,வுக்கு, சிறிய கட்சிகள், சுயேச்சைகள் ஆதரவு அளித்தன. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 11 பேரில், ஆறு பேர் பா.ஜ.,வில் இணைய இருப்பதாக, கடந்த வாரம் செய்தி வெளியானது. தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களை இழுக்க, பா.ஜ., பேரம் பேசுவதாக, காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
கோவா நிலைமை மோசமடைவதை உணர்ந்த காங்கிரஸ் தலைவர் சோனியா, மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக்கை அங்கு அனுப்பினார். ஜனாதிபதி தேர்தல் நேரத்தில் எம்.எல்.ஏ.,க்கள் கட்சி தாவுவது, பின்னடைவை ஏற்படுத்தும் என, காங்கிரஸ் கருதுகிறது. எனவே, அதிரடி நடவடிக்கையாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேர், சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் -- சிவசேனா கூட்டணி அரசு கவிழ்ந்து, பா.ஜ., அரசு வந்துள்ளது. கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசம் என சுற்றியுள்ள மாநிலங்களில், பா.ஜ., அரசும், தெலுங்கானா, ஆந்திரா, கேரளாவில் காங்கிரசை எதிர்க்கும் கட்சிகளும் ஆட்சியில் உள்ளன. எனவே, கூட்டணி கட்சியான தி.மு.க., ஆளும் தமிழகத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் ஒருவரிடம் பேசியபோது, 'முதல் கட்டமாக, ஆறு எம்.எல்.ஏ.,க்கள் வந்துள்ளனர். மீதமுள்ள ஐந்து எம்.எல்.ஏ.,க்களை தொடர்பு கொள்ள, முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர்' என்றார்.