சென்னை: கள்ளக்குறிச்சியில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து, அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்குமாறு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக மாணவியின் உறவினர்கள் பள்ளி நிர்வாகம் மீது குற்றம் சாட்டினர். இந்த நிலையில், மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பள்ளிக்கு எதிராக மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இன்று போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாரை தாக்கி பள்ளிக்குள் நுழைந்து, பேருந்துகள் மற்றும் பள்ளி கட்டடத்தை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள், பேருந்துகளை தீயிட்டு கொளுத்தினர். போராட்டம் வன்முறையாக மாறியதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
வன்முறை சம்பவங்கள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் போலீஸ் விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். உள்துறைச் செயலாளரையும், போலீஸ் தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன். அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.