வேலூர்: ‛சுதந்திர இந்தியா 75' என்ற பெயரில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தன் சொந்த வாகனத்தில் ‛ஒன்றியமல்ல இந்தியா, திராவிடமல்ல தேசியம்' என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தது. இதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்து குறிப்பிட்ட வார்த்தைகளை மறைத்து ஒட்டியதற்கு அர்ஜூன் சம்பத் கண்டனம் தெரிவித்ததுடன், அதற்கான விளக்கத்தையும் கூறியுள்ளார்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் அரசு விழாக்கள் நடைபெறுகிறது. பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளும் இந்த பவள விழா ஆண்டை கொண்டாடி வருகின்றன. அந்த வகையில் இந்து மக்கள் கட்சி சார்பில் 75வது சுதந்திர விழாவை ஒட்டி, ‛சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை போற்றுவோம், சுதந்திரப் போராட்ட நினைவிடங்களில் வீரவணக்கம் செலுத்துவோம்' என அக்கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட வீரர்கள் மற்றும் அவரது நினைவிடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

வேலூரில் அர்ஜூன் சம்பத்தின் இந்த ‛சுதந்திர இந்தியா 75' யாத்திரையை போலீசார் தடை விதித்தனர். மேலும், அவரது சுற்றுப்பயண வாகனத்தில் உள்ள வாசகங்களையும் போலீசார் காகிதத்தால் மறைத்தனர். இதற்கு அர்ஜூன் சம்பத் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் பேசியதாவது: எனது அடிப்படை உரிமை பறிக்கப்படுகிறது. எத்தனையோ வண்டிகளில் என்னென்னமோ ஸ்டிக்கர்கள் ஒட்டுகின்றனர். ‛ஒன்றியம் அல்ல இந்தியா! திராவிடம் அல்ல தேசியமே!!' என்பதில் என்ன தவறு உள்ளது. பல வாகனங்களில் பைபிள் வாசகங்கள், பொன்மொழிகள் எழுதப்படுகிறது. நாங்கள் யாருடைய மனதையும் காயப்படுத்தவில்லை. நீங்கள் (திமுக அரசு) ஒன்றியம் என சொல்லும்போது எங்கள் மனது காயப்படுகிறது.

எத்தனை சுதந்திர போராட்ட வீரர்கள் ரத்தம் சிந்தி இந்த தேசத்தை காப்பாற்றியுள்ளனர். அதனை மறைத்து ஒட்டியுள்ளனர். இது இப்படியே இருக்கட்டும், தமிழகம் முழுவதும் இப்படிதான் போவேன். தமிழகத்தில் எந்தளவிற்கு எங்களவு பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை மறுக்கப்படுகிறது என்பதற்கு அடையாளமாக இது இருக்கட்டும். இது என் சொந்த வண்டி. வந்தே மாதரம் பயணம் என்பதில் பயணத்தை அழித்துவிட்டனர். இந்த பயணத்தை தடை செய்யப்படுவதாக அழித்துள்ளனர். இதனை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.