வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நாடு முழுவதும் 200 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு இந்தியா சாதனை படைத்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கோவிட் பரவலை கட்டுப்படுத்த கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள், கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் செலுத்தப்படுகின்றன. இரு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு, பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது. பூஸ்டர் டோஸ் செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 75 நாட்களுக்கு இலவசமாக மத்திய அரசு தடுப்பூசி செலுத்தி வருகிறது. தற்போதைய சூழலில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (ஜூலை 17) காலை 8 மணி நிலவரப்படி 199.98 கோடி டோஸ் தடுப்பூசிகள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இன்று 200 கோடி டோஸ் என்னும் மைல்கல்லை கடந்து இந்தியா மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளது. இச்சாதனையை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். அவர் தெரிவித்ததாவது: மீண்டும் இந்தியா வரலாறு படைத்துள்ளது. 200 கோடி டோஸ் தடுப்பூசி அளவை தாண்டியதற்கு அனைத்து இந்தியர்களுக்கும் எனது வாழ்த்துகள். இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தை அளவிலும் வேகத்திலும் இணையற்றதாக மாற்ற பங்களித்தவர்களைப் பற்றி பெருமைப்படுகிறேன். கோவிட்டுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை இது வலுப்படுத்தி உள்ளது. இந்திய மக்கள் அறிவியலில் குறிப்பிடத்தக்க நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். நமது மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப்பணியாளர்கள், விஞ்ஞானிகள், மற்றும் தொழில்முனைவோர் ஆகியோர் பாதுகாப்பான உலகத்தை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். அவர்களின் மன உறுதியை பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி இயக்கத்தின் முக்கிய அம்சங்கள்: நாடு முழுதும், 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில், 98 சதவீதம் பேருக்கு முதல் டோஸ்; 90 சதவீதம் பேருக்கு இரண்டு டோஸ் வழங்கப்பட்டுள்ளது 15 - 18 வயதுடையோரில், 82 சதவீதம் பேருக்கு முதல் டோஸ்; 68 சதவீதம் பேருக்கு இரண்டு டோஸ் வழங்கப்பட்டுள்ளது 12 -- 14 வயதுக்குட்பட்டோரில், 81 சதவீதம் பேருக்கு ஒரு டோஸ்; 56 சதவீதம் பேருக்கு இரண்டு டோஸ் கிடைத்துள்ளது இதுவரை வழங்கப்பட்ட தடுப்பூசியில், 71 சதவீதம் கிராமப் பகுதிகளில் உள்ள தடுப்பூசி மையங்களிலும், 29 சதவீதம் நகரப் பகுதி மையங்கள் வாயிலாகவும் செலுத்தப்பட்டு உள்ளது இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளில், 48.9 சதவீதம் ஆண்களுக்கும், 51.5 சதவீதம் பெண்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 0.02 சதவீதம் மாற்று பாலினத்தோருக்கு வழங்கப்பட்டுள்ளது ஆந்திரா, அந்தமான் - நிகோபர் தீவுகள், ஜம்மு - காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், லட்சத்தீவுகள், சண்டிகர், தெலுங்கானா, கோவா ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு, 100 சதவீதம் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது அதிக டோஸ்கள் வழங்கிய மாநிலங்களில் உத்தர பிரதேசம், 34.41 கோடி, மஹாராஷ்டிரா, 17.05 கோடி, மேற்கு வங்கம், 14.40 கோடி, பீஹார், 12.98 கோடி, மத்திய பிரதேசம், 12.13 கோடியுடன் முதல் ஐந்து இடங்களில் உள்ளன கடந்தாண்டு அக்., 21ம் தேதி, 100 கோடி டோஸ் என்ற சாதனை அளவு எட்டப்பட்டது. இந்தாண்டு, ஜன., 7ல், 150 கோடி டோஸ் சாதனை அளவு எட்டப்பட்டது.