கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண விவகாரத்தில் ...கலவரம் செய்தோர் சமூக விரோதிகள்?

Updated : ஜூலை 19, 2022 | Added : ஜூலை 17, 2022 | கருத்துகள் (64) | |
Advertisement
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண விவகாரத்தில், போராட்டக்காரர்களுக்கு தெரியாமல் நுழைந்து, சமூக விரோதிகள் கலவரத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுவரை 70 பேர் கைதாகி உள்ள நிலையில், அவர்களை துருவித் துருவி விசாரிக்க, காவல் துறை தீவிரமாக உள்ளது. மேலும் பலரை சுற்றி வளைக்க டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த
மாணவி, மரணம்,விவகாரம்,கலவரம்,செய்தோர்,சமூக,விரோதிகள்?

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண விவகாரத்தில், போராட்டக்காரர்களுக்கு தெரியாமல் நுழைந்து, சமூக விரோதிகள் கலவரத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுவரை 70 பேர் கைதாகி உள்ள நிலையில், அவர்களை துருவித் துருவி விசாரிக்க, காவல் துறை தீவிரமாக உள்ளது. மேலும் பலரை சுற்றி வளைக்க டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த பெரியநெசலுாரைச் சேர்ந்தவரான ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி, 17. இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம், கணியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்து வந்தார். விடுதியின் மூன்றாவது மாடியில் தங்கியிருந்த ஸ்ரீமதி, இம்மாதம் 13ம் தேதி அதிகாலை தரை தளத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.

இதனால் மாணவியின் பெற்றோர், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 'மகள் ஸ்ரீமதி அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம். பள்ளி நிர்வாகத்தார் முன்னுக்குபின் முரணாக தகவல் தெரிவித்தனர். பள்ளியை மூடி, தாளாளர் உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும். இதற்கு முன் இறந்த ஐந்து மாணவியர் குறித்தும் விசாரிக்க வேண்டும்' என வலியுறுத்தி, 13ம் தேதியே, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர்.


மாணவி கடிதம்

இவர்களிடம், கள்ளக்குறிச்சி எஸ்.பி., செல்வகுமார் பேச்சு நடத்தினார். அப்போது, மாணவி எழுதிய கடிதத்தைப் படித்தார். 'கிளாசுக்கு வந்த ஸ்டாப் என்னை, 'படிக்கவே மாட்டியாமா... விளையாட்டுத்தனமா இருக்கிறியே'ன்னு கேட்டாங்க. கணிதம், வரலாறு ஆசிரியர்கள், என்னை ரொம்ப, 'பிரஷர்' பண்றாங்க; என்னால முடியல. கணித ஆசிரியர், என்னை மட்டுமில்லாமல், எல்லாரையும் 'டார்ச்சர்' பண்றாங்க.
'உங்களுக்கு நான் 'ரிக்வெஸ்ட்' வைக்கிறேன். எனக்கு இந்த வருஷத்துக்கு கட்டின ஸ்கூல் பீஸ், புக், ஹாஸ்டல் பீசை, எங்க அம்மாகிட்ட திருப்பி கொடுத்துடுங்க. சாரி அப்பா, சாரி சந்தோஷ்...' என எழுதியிருப்பதாக, கடிதத்தில் இருந்த சில பெயர்களையும் எஸ்.பி., வாசித்தார்.எனினும் போராட்டக்காரர்கள் சமாதானம் அடையவில்லை. கடிதம் குறித்து, போலீசார் மீதே சந்தேகத்தை கிளப்பினர்.

உடலை வாங்க மறுப்பு
மறுநாள் ஸ்ரீமதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை கோரி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன் மறியல் போராட்டம் நடத்தினர்.போலீசார் பேச்சு நடத்தியதால் மறியலை கைவிட்டு, பிரேத பரிசோதனை செய்ய ஒப்புக் கொண்டனர். ஆனால், 'பரிசோதனை முடிவு தெரியும் வரை, உடலை வாங்க மாட்டோம்' எனக் கூறி கலைந்து சென்றனர்.
தொடர்ந்து, 15ம் தேதி கடலுார் மாவட்டம், வேப்பூர் தாலுகா அலுவலகம் முன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மற்றும் நான்கு முனை சந்திப்பிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந் நிலையில், இளைஞர்கள் சிலர், பள்ளி முன் மாணவி ஸ்ரீமதியின் இறப்புக்கு நியாயம் கேட்டு போராட்டம் நடைபெற உள்ளதாகவும், அனைவரும் பங்கேற்குமாறும், சமூக வலைதளங்களில், மூன்று நாட்களாக தகவல் பரப்பினர்.இது, அப்பகுதியில் காட்டுத் தீ போல பரவியது.

மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தான் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்ற நிலை மாறி, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள், போராட்டக்காரர்கள் போல ஊடுருவினர்.இவர்கள் யார், எந்த ஊர், எங்கிருந்து இவ்வளவு பேர் வருகின்றனர், இதன் பின்னணியில் இருப்போர் யார் என்பது குறித்த விபரங்களைச் சேகரிக்க, போலீசார் தவறி விட்டனர்.
மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு, சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர். இதனால், அங்கு விழுப்புரம் டி.ஐ.ஜி., பாண்டியன், கள்ளக்குறிச்சி எஸ்.பி., செல்வகுமார் தலைமையில், 350க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 'பேரிகார்டு'களும் போடப்பட்டு இருந்தன.
நேற்று காலை 9:00 மணி முதல் பஸ் மற்றும் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் வாயிலாக, 3,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொதுமக்கள் கணியாமூர் பஸ் நிறுத்தத்தில் குவிந்தனர். பேரணியாகச் சென்று, பள்ளி முன் மறியலில் ஈடுபட்டனர். போலீசாரின் சமாதானத்தை ஏற்காத போராட்டக்காரர்கள், கோஷமிட்டபடி தடுப்புக்கு வைத்திருந்த 'பேரிகார்டு'களை தள்ளி முன்னேறினர். இதனால், போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போலீஸ் தடியடி
பல்வேறு ஊர்களில் இருந்து வந்த மேலும் ஆயிரக்கணக்கானோர், பள்ளி முன்பு திரண்டதால், பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. போலீசார் லேசான தடியடி நடத்தினர். கூட்டத்தில் இருந்த சிலர், போலீசார் மீது கல்வீசி தாக்கினர். குறைந்த அளவிலான போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்ததால், அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
வன்முறையாளர்களை கலைக்க துப்பாக்கியால் வானத்தை நோக்கி, இரண்டு ரவுண்டு சுட்டு, போலீசார் எச்சரித்தனர். அதையும் மீறி வன்முறையாளர்கள், போலீசார் மீது தாக்குதல் நடத்த துவங்கினர். அப்போது ஏற்பட்ட மோதலில் டி.ஐ.ஜி., பாண்டியன், எஸ்.பி., செல்வகுமார், ஏ.டி.எஸ்.பி., கோவிந்தராஜ் உள்ளிட்டோர் தங்களை பாதுகாத்து கொள்ள, தெரித்து ஓடினர். உடனடியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து போலீசாரை வரவழைக்க எஸ்.பி., நடவடிக்கை மேற்கொண்டார்.


எலும்பு கூடான பள்ளி
போராட்டம் கலவரமாக மாறியது. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தினர்; தீ வைத்து எரித்தனர். பள்ளிக்குள் புகுந்து கண்ணில் பட்டதை யெல்லாம் உடைத்து, சேதப்படுத்தி, போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அங்கு நிறுத்தி வைக்கப் பட்டு இருந்த, 16 பஸ்கள், ஒரு ஜே.சி.பி., வாகனம், ஒரு கார், மூன்று டிராக்டர், போலீசார் மற்றும் பத்திரிகையாளர்களின் பைக்குகள் உட்பட, 70 வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

பஸ்களை, டிராக்டரால் மோதி சேதப்படுத்தினர்.கும்பலாக சேர்ந்து பஸ்களை கீழே கவிழ்த்தனர். பள்ளி வளாகம் முழுதும் தீ, கொழுந்து விட்டு எரிந்து, அந்தப் பகுதி முழுதும் புகைமண்டலமாக காட்சியளித்தது.பள்ளி அறைகளை உடைத்து உள்ளே இருந்த ஆவணங்கள், சான்றிதழ்கள், கம்ப்யூட்டர், மின் விசிறிகள் உள்ளிட்ட அனைத்தையும் தீயிட்டு எரித்தனர்.

விடுதியின் உள்ளேயும் தீ வைத்தனர். சமையலறையில் இருந்த சிலிண்டர்கள், ஒவ்வொன்றாக வெடித்து சிதறின. அரை மணி நேரத்தில் அந்த இடமே பெரும் போர்க்களம் போல காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் கல்வீச்சு, தீ வைப்பு, அலறல் சத்தம். எவர் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என்ற சூழல் நிலவியது. பள்ளி எலும்பு கூடாக மாறியது.
நிலைமை மோசமானதால், விழுப்புரம், கடலுார், சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிரடிப்படை மற்றும் அதிவிரைவுப்படை போலீசார், ஆயுதங்களுடன் விரைந்தும், கலவர கும்பலை கட்டுப்படுத்த முடியவில்லை. அதிரடிப்படை வீரர்கள் மீது மீண்டும் கல்வீசியும், பெட்ரோல் குண்டுகளாலும் கலவரக்காரர்கள் தாக்கி, விரட்டினர்.

இதனால், சற்று பின்வாங்கிய அவர்கள், கூடுதல் போலீசார் வந்தவுடன் வன்முறையாளர்கள் மீது தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டினர். இதனால் வன்முறை கும்பல், வயல்வெளி பகுதியில் தப்பித்து ஓடியது, சிலரை துரத்தி பிடித்த போலீசார், வாகனத்தில் ஏற்றினர்.
கட்டுக்குள் வந்த கலவரம்

சட்டம் - ஒழுங்கு கூடுதல டி.ஜி.பி., தாமரைக்கண்ணன், வடக்கு மண்டல ஐ.ஜி., தேன்மொழி, டி.ஐ.ஜி.,க்கள் திருச்சி சந்தோஷ், சேலம் டி.ஐ.ஜி., அஷ்வின் உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் அங்கு விரைந்தனர்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து குவிக்கப்பட்ட 1,000க்கும் மேற்பட்ட போலீசார், அங்கு கூடியிருந்த வன்முறை கும்பலை அடித்து விரட்டினர். பிடிபடுபவர்களை கைது செய்ததால், வன்முறையாளர்கள் சிதறி ஓடினர்.பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த போலீசார், அங்கிருந்த சிலரை விரட்டி அடித்தனர். பகல் 2:00 மணியளவில் பள்ளி வளாகம், போலீசாரின் முழு கட்டுப்பாட்டிற்கு வந்தது.
போலீசார் படுகாயம்
கலவரக்காரர்கள் கற்களால் தாக்கியதால், டி.ஐ.ஜி., பாண்டியன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கலால் டி.எஸ்.பி., ரவிச்சந்திரன், உளுந்துார்பேட்டை டி.எஸ்.பி., மகேஷ், திருக்கோவிலுார் இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், பாபு, கலால் இன்ஸ்பெக்டர் பாண்டியனுக்கு தலை, கை மற்றும் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.டி.ஐ.ஜி., பாண்டியன், கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையிலும், மற்றவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். தலையில் காமயடைந்தவர்களுக்கு சி.டி., ஸ்கேன் வாயிலாக, பரிசோதனை செய்து, முதலுதவி அளிக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி எஸ்.பி., செல்வகுமார், டி.எஸ்.பி.,கோவிந்தராஜ் ஆகியோர் லேசான காயமடைந்தனர்.
144 தடை உத்தரவு

மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல், போலீசார் திணறினர்.இதையொட்டி, நேற்று மதியம் 2:45 மணி முதல், 31ம் தேதி வரை, கள்ளக்குறிச்சி தாலுகா பகுதியிலும், சின்னசேலம் மற்றும் நைனார்பாளையம் குறுவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போராட்டக்காரர்களுக்கு தெரியாமல், வன்முறையாளர்கள் உள்ளே புகுந்தது எப்படி, அவர்கள் யார் என, 'நெம்பி எடுத்து' விசாரிக்க, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மேலும் பலரைச் சுற்றி வளைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
வழக்கு இன்று விசாரணை

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பான விசாரணையை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றக் கோரி, மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று, விசாரணைக்கு வருகிறது.
மாணவியின் தந்தை ராமலிங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: மகள் இறந்த தகவல் அறிந்து பள்ளிக்கு சென்றோம். இறப்புக்கான காரணம் குறித்து அறிய, விடுதியில் மகளுடன் தங்கியிருந்த சக மாணவியரையும், விடுதி அறையையும் பார்வையிடச் சென்றோம். பள்ளி நிர்வாகம், எங்களை அனுமதிக்கவில்லை. மகள் மரணத்தில் சந்தேகம் உள்ளது. முதலில் நடந்த பிரேத பரிசோதனையின்போது, எங்களை உடனிருக்க அனுமதிக்கவில்லை.

மகளின் உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் உள்ளன.எனவே, மகள் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியவும், சந்தேக மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக் கொண்டு வரவும், நாங்கள் தெரிவிக்கும் மருத்துவர் குழுவால்,உடலை மறு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும்.

இதுதொடர்பாக, மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், தேசிய மனித உரிமைகள் ஆணைய வழிகாட்டுதல்படி, பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்யவில்லை. எனவே, மறு பிரேத பரிசோதனைக்கும், விசாரணையை சி.பி.சி.ஐ.டி.,க்கும் மாற்ற உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன், இன்று விசாரணைக்கு வருகிறது.

மக்கள் அமைதி காக்க முதல்வர் கோரிக்கை
'அரசின் நடவடிக்கையின் மேல் நம்பிக்கை வைத்து, பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அவரது சமூக வலைதள பதிவு: கள்ளக்குறிச்சியில் நிலவி வரும் சூழல், வருத்தம் அளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடந்து வரும் விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்.உள்துறை செயலரையும், டி.ஜி.பி.,யையும் கள்ளக்குறிச்சி செல்ல உத்தரவிட்டுள்ளேன். அரசின் நடவடிக்கை மேல் நம்பிக்கை வைத்து, பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

தனியார் பள்ளிகள் இன்று இயங்காது!

'தனியார் பள்ளி மாணவி மரணம்; அதன் தொடர்ச்சியாக நடக்கும் வன்முறை காரணமாக, தமிழகம் முழுதும் தனியார் பள்ளிகள் இன்று இயங்காது' என, தனியார் பள்ளி சங்கங்கள் அறிவித்துள்ளன.தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பான 'பேப்சிட்' மாநில தலைவர் ராஜா, செயலர் இளங்கோவன் மற்றும் பொருளாளர் சந்திரசேகர் ஆகியோர் கூட்டாக விடுத்த அறிக்கை: தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியர்கள் மற்றும் உடைமைகளுக்கும், பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

தனியார் பள்ளியில், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது, தக்க நடவடிக்கை எடுக்க கோரியும், பள்ளிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டும், இன்று தமிழகம் முழுதும் உள்ள தனியார் பள்ளிகள் இயங்காது.வருங்காலங்களில் பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள், இன்று கருப்பு 'பேட்ஜ்' அணிந்து, மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் ஆகியோரிடம், கோரிக்கை மனு அளிக்க உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க மாநில செயலர் நந்தகுமார் வெளியிட்ட அறிவிப்பு:சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளி வளாகம் சூறையாடலால், 50 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 20 ஆயிரம் தனியார் பள்ளிகள் இயங்குகின்றன.

இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால், பள்ளிகளுக்கு பாதுகாப்பு இருக்காது. எனவே, மருத்துவ மனைகளுக்கு வழங்கப்படுவது போல, தனியார் பள்ளிகளுக்கும் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி, இன்று முதல் தனியார் பள்ளிகள் இயங்காது. ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள், கருப்பு பேட்ஜ் அணிந்து, கலெக்டர் அலுவலங்களில் இன்று மனு அளிக்க உள்ளனர். தனியார் பள்ளி சங்க நிர்வாகிகளை அழைத்து, அரசு பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும்; இல்லாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் இன்று செயல்படுமா, விடுமுறையா என்பது குறித்து, பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ், செயலர் காகர்லா உஷா மற்றும் கமிஷனர் நந்தகுமார் ஆகியோர், எந்த வித அறிவிப்பும் வெளியிடவில்லை.
- நமது நிருபர் குழு -


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இலங்கை
18-ஜூலை-202220:38:15 IST Report Abuse
jagan தேர்தல் முடிந்தவுடனே சொன்னது தான் 'இவன் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டன்'
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
18-ஜூலை-202220:36:08 IST Report Abuse
jagan ஸ்டெர்லிட் போராட்டத்திலும் இது போல் ஆட்கள். இந்த சைக்கோ, குருமா போன்றவர்களை தட்டி விசாரிக்க வேண்டும்
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
18-ஜூலை-202220:35:05 IST Report Abuse
jagan அதிமுக ஆபீஸ், இப்போ இது, எவனுக்கும் போலீஸ் மீது பயம் இல்லை. இதற்க்கு காரணம் நீதிதுறையே.எவனுக்கும் தண்டனை கிடையாது. எப்போ பாரு ஆதாரம் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X