மாமல்லபுரம் : செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், இம்மாதம் 28ம் தேதி முதல், ஆக., 10ம் தேதி வரை, சர்வதேச செஸ்ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க, 188 நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் மாமல்லையில் முகாமிட்டுள்ளனர்.
இதனால், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மாமல்லபுரத்தில் வழக்கம் போல், உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணியர் அனுமதிக்கப்படுவராஅல்லது தற்காலிகமாக சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசு தரப்பில் இருந்து, இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாததால், இந்த விஷயத்தில் குழப்பம் நீடிக்கிறது.வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரத்தில், பல்லவர் கால சிற்பங்கள், குடைவரை கோவில்கள், ஐந்து ரத சிற்பம், அர்ச்சுனன் தபசு சிற்பம் உள்ளிட்ட பல சுற்றுலா அம்சங்கள் நிறைந்துள்ளன.இதைத் தவிர, மாமல்லை கடற்கரையில் அமைந்துள்ள பல்லவர் கால கடற்கரை கோவிலை காண, உலகெங்கிலும் இருந்து சுற்றுலா பயணியர் வருவது வழக்கம். உள்கட்டமைப்பு'கொரோனா' ஊரடங்கால், களையிழந்த சுற்றுலாத் துறை, தற்போது மீண்டும் தலைதுாக்க துவங்கியுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணியர் வருகையும் பழைய படி அதிகரித்து உள்ளது.இதனால், சுற்றுலா பயணியரை நம்பி தொழில் புரியும், கைவினை கலைஞர்கள், இப்பகுதியில் செயல்படும் தேனீர் கடை, உணவக உரிமையாளர்கள்மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கொரோனாவால் நலிந்த தங்கள் வாழ்வாதாரம் மீண்டும் தலைதுாக்கியதால், மாமல்லையில் வசிக்கும் சிறு வியாபாரிகள், சிற்ப கலைஞர்கள் உள்ளிட்டோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இந்நிலையில், சர்வதேசசெஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லையில் நடைபெறும் என அரசு அறிவித்தது,
இப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சர்வதேச அளவில் நடைபெறும் போட்டி, தங்கள் ஊரில் நடக்கும் என்பதால், மாமல்லைவாசிகள் உற்சாகம் அடைந்தனர். ஏற்கனவே, 2019ம் ஆண்டு, நம் நாட்டிற்கு வருகை புரிந்த, சீன அதிபர் ஜிங்பிங் மாமல்லை சிற்பங்களை பார்த்து வியந்தார்.இங்கு, பிரதமர் மோடி - சீன அதிபர் ஜிங்பிங் சந்தித்து பேசிய நிகழ்வு, சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. இதைத் தொடர்ந்து, மாமல்லைக்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை முன்பு எப்போதையும் விட அதிகரித்தது. இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பை ஒட்டி, மாமல்லையில் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டன. இதனால், அங்கு வசிக்கும் மக்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது சர்வதேச செஸ் போட்டிகள் நடைபெற உள்ளதையொட்டி, பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள், மாமல்லையில் முகாமிட்டுள்ளனர்.
வரும் 28ம் தேதி முதல் போட்டிகள் துவங்க உள்ளதால், மாமல்லை மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. செஸ் போட்டிக்கான விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில், சென்னை மெரினா உள்ளிட்ட பல பகுதிகளில் செஸ் போர்டு வரைபடங்கள் அமைக்கப்பட்டதுடன், செஸ் போட்டியில் பயன்படுத்தப்படும் குதிரை பொம்மை நிறுவப்பட்டு உள்ளது.குழப்பம்பேருந்துகளிலும், செஸ் போட்டி குறித்த விளம்பர ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
![]()
|
ஆக., 10ம் தேதி வரை நடைபெறும் செஸ் போட்டிகளில், 188 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர்.போட்டிக்காக, அரசுத் துறைகளின் முதன்மை செயலர் உள்ளிட்டோருடன், 18 குழுக்கள் அமைக்கப்பட்டு, 92 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பிற்காக, 4,000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.ஏற்கனவே, சர்வதேச அளவில் புகழ்பெற்ற மாமல்லையில், சர்வதேச செஸ் போட்டி நடைபெறுவதால், மாமல்லை மற்றும் அதை சுற்றிய பகுதிகள் புதுப்பொலிவு அடைந்துள்ளன.
இந்நிலையில், பாதுகாப்பு காரணங்கள் கருதி, வழக்கமான சுற்றுலா பயணியருக்கு அப்பகுதியில் தடை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், அரசு தரப்பிலிருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாததால், இந்த விஷயத்தில் குழப்பம் நீடிக்கிறது. சர்வதேச போட்டி நடைபெறும் நிலையில், செஸ் பிரியர்கள் பலரும் போட்டி நடைபெறும் பகுதியை காண மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். அதே போல், வழக்கத்தை விட சுற்றுலா பயணியர் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், சர்வதேச போட்டியை காரணம் காட்டி, சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்காமல், உரிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி, சுற்றுலாவை மேம்படுத்த இதை ஓர் வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாமல்லையில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடப்பது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:எங்கள் ஊரில் சர்வதேச போட்டிகள் நடப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. ஏற்கனவே வரலாற்று சிறப்பு மிக்க ஊரில் வசிப்பதை எண்ணி பெருமைப்படும் நிலையில், இங்கு செஸ் போட்டி நடப்பது மேலும் பெருமையாக உள்ளது.பிரதமர் - சீன அதிபர் சந்திப்பால், எங்கள் ஊரின் பெருமை மேலும் வெளிச்சத்திற்கு வந்தது. தற்போது, மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதை, அரசு நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி, இங்கு சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பு காரணங்கள் கருதி, சுற்றுலாவுக்கு தற்காலிக தடை விதிப்பதை விட, பாதுகாப்பை பலப்படுத்தி, சுற்றுலாவை பெருக்க நடவடிக்கை எடுக்கலாம். அப்போது தான், இப்பகுதி மேலும் வளர்ச்சி அடையும். இங்குள்ள வியாபாரிகளின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.