வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், பார்லிமென்ட் இரு அவைகளும் 2வது நாளாக ஒத்திவைக்கப்பட்டது.
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. அதில், பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு, அக்னிபத் திட்டம் உள்ளிட்டவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், முதல்நாளில் எந்த பணிகளும் நடக்காமல் பார்லிமென்ட் ஒத்திவைக்கப்பட்டது.
இன்றும் இரண்டாவது நாளாக, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் எம்.பி.,க்கள் கோஷம் எழுப்பினர். இதனையடுத்து இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பிரதமர் ஆலோசனை
எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால், அரசின் நிலைப்பாடு குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.
எதிர்க்கட்சிகள் போராட்டம்

விலைவாசி மற்றும் பணவீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள, காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ராகுல் கலந்து கொண்டார். அப்போது அரசுக்கு எதிராக எம்.பி.,க்கள் கோஷம் எழுப்பினர்.

அப்போது, மல்லிகார்ஜூனா கார்கே பேசுகையில், விலைவாசி உயர்வு, பணவீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக போராட்டம் நடத்துகின்றன. இதற்கு எதிராக போராட்டம் தொடரும் என்றார்.
கெஜ்ரிவாலுக்காக ஆம் ஆத்மி போராட்டம்

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிங்கப்பூர் பயணத்திற்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு தாமதம் செய்வதாக கூறி, ஆம் ஆத்மி எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தினர்.