“வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்குகிறது! ஜூலை 31, 2022க்கு முன் 2022-23 மதிப்பீட்டு ஆண்டுக்கான ஐ.டி.ஆரைத் தாக்கல் செய்ய மறக்காதீர்கள்.” என வருமான வரித்துறை நினைவூட்டல் பதிவிட்டுள்ளது. வரி செலுத்த, ரிட்டர்ன் தாக்கல் செய்ய காலம் தாழ்த்துவதால் ஏற்படும் சிக்கல்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
தொழில்நுட்ப கோளாறு
கடந்த 2021 ஜூன் மாதம் வருமான வரி இ-பைலிங் போர்டல் தொடங்கப்பட்டதில் இருந்து, இந்த அமைப்பு பல முறை தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் கோளாறுகளை எதிர்கொண்டுள்ளது. கடைசி நேரத்தில் டிராபிக் அதிகமாகும் போது இந்த பிரச்னை எழுகிறது. எனவே உங்கள் வருமான வரி தாக்கலை காலக்கெடுவுக்கு முன்பாகவே செய்து முடித்து நிம்மதியாக இருங்கள்.
கடைசி நேர பிழைகள்
![]()
|
கடைசி நேரத்தில் அவசர அவசரமாக வருமான வரித் தாக்கல் செய்யும் போது பிழைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏராளம். இதனால் உங்களுக்கு வர வேண்டிய ரிட்டர்ன் நிராகரிக்கப்படலாம். அவசரத்தில் பலரும் செய்யும் பொதுவான பிழைகள் - தவறான படிவத்தை தாக்கல் செய்வது, தவறான மதிப்பீட்டு ஆண்டை குறிப்பது, தனிநபர் தகவல்களான பெயர், பிறந்த தேதி, பான் மற்றும் வங்கி தகவல்களை தவறாக பதிவிடுவது. வருமானத்தை குறிப்பிடும் போது எண்களை மாற்றிப்போட்டுவிடுவது, தவறான கணக்கீடுகள், கூடுதல் முதலீட்டுகளை குறிப்பிட மறப்பது போன்றவை நிகழும். இதனால் முன்னரே நேரம் ஒதுக்கி ரிலாக்ஸ்டாக இதனை செய்வது நல்லது.
அபராதம் செலுத்த நேரிடம்
வருமான வரியை சரியான நேரத்தில் தாக்கல் செய்யத் தவறினால், குறிப்பிட்ட தொகையை அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும் என்பது பலரும் அறிந்ததே. ஐ.டி., பிரிவு 23எப்-ன் படி, வருமான வரி அறிவித்த தேதிக்குள் வருமானத்தை தெரிவிக்க தவறினால் அபராதம் கட்ட வேண்டும் என்கிறது. மதிப்பீட்டு ஆண்டின் டிச., 31க்குள் ரிட்டர்ன் தாக்கல் செய்யப்பட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம். சில வழக்குகளில் இது ரூ.10,000 ஆக இருக்கும். ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்குள் இருந்தால் அபராதம் ரூ.1,000க்குள் இருக்கும்.
வருமான இழப்புகளை ஈடுகட்ட முடியாது
![]()
|
சரியான நேரத்தில் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யத்தவறினால் அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்த இழப்பை வருமானத்துடன் ஈடுகட்ட முடியாமல் போகலாம். இதனால் இழப்பை காட்டி வருமானத்தை குறைக்க முடியாது. மொத்த வருமானத்துக்கும் வரி கட்ட வேண்டி இருக்கும். பிரிவு 139 (1)ன் படி நஷ்டம் அல்லது வருமானத்தை குறித்த தேதிக்குள் அல்லது அதற்கு முன்பாக சமர்பித்தால் மட்டுமே இழப்புகளை வரும் ஆண்டுகளில் நேர் செய்ய முடியும்.
டிடிஎஸ் கிளைம் பாதிக்கும்
தனி நபரின் சம்பளம், வங்கி வைப்புத் தொகை போன்ற பிற வருமானங்களிலிருந்து வரி பிடிக்கப்படும். இதனை ஐடி ரிட்டர்ன் தாக்கல் செய்து திரும்பப் பெறலாம். அதற்காக படிவம் 16ஐ வேலை பார்க்கும் நிறுவனத்திடம் வாங்கி வரி விலக்கிற்கான முதலீடுகள், வீட்டு வாடகை போன்ற ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். சரியான நேரத்தில் ஐடி ரிட்டர்ன் தாக்கல் செய்தால் சில நாட்களில் கிளைம் தொகை வங்கிக் கணக்கில் கிடைத்துவிடும். காலம் தாழ்த்தினால் அப்பணம் வருவதும் தாமதமாகும்.