வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: கள்ளக்குறிச்சியில் ஐகோர்ட் உத்தரவுப்படி மாணவி ஸ்ரீ மதியின் உடல் இன்று மறு பிரேத பரிசோதனை நடக்கவிருந்த நிலையில் மாணவியின் பெற்றோர் வரவில்லை. இதனால் போலீசார் மற்றும் அரசு தரப்பில் இன்று நீதிபதியிடம் முறையிடப்பட்டது.

கனியமூர் சக்தி மெட்ரிக்., தனியார் பள்ளி மாணவி மரணத்தில் மர்மம் இருப்பதாக கடந்த 17 ம் தேதி மாணவர்கள் என்ற போர்வையில் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை திட்டமிட்டு நடத்தபப்பட்டிருப்பதாக கோர்ட் கருத்து தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் நீதிபதி சதீஷ்குமார் மறு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார் . இதில் மனுதாரர் வழக்கறிஞர் மற்றும் தந்தையும் பங்கேற்கலாம், வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதன்படி இன்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் குழு தயாரானது. பலத்த பாதுகாப்பும் போடப்பட்டது. ஆனால் பெற்றோர் தரப்பில் யாரும் வரவில்லை.

இது குறித்து அரசு தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதி பெற்றோர் இல்லாமலும் பிரேத பரிசோதை நடத்தலாம். அதே நேரத்தில் வந்தால் அனுமதிக்கலாம் என்றும் நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்தார். இதனையடுத்து மருத்துவ பரிசோதனை இன்று மதியம் 1 மணியளவில் துவங்கியது.
சுப்ரீம் கோர்ட்டிற்கு அவரமாக சென்றது ஏன் ?
நேற்றைய ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இன்று மாணவி தந்தை தரப்பில் அவசர, அவசரமாக பிரேத பரிசோதனைக்கு தடை கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட் இதனை ஏற்க மறுத்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.