வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் பிரச்னையில், முதல்வர் தலையிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்த காலம், அடுத்த மாதத்துடன் முடிவடையும். ஆனால், இதுவரை புதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை. இதற்காக, அ.தி.மு.க., ஆட்சியில் இரண்டு முறையும், இந்த ஆட்சியில் மூன்று முறையும் பேச்சு நடத்தப்பட்டது; உடன்பாடு ஏற்படவில்லை.
குறிப்பாக, பணிமூப்பு அடிப்படையில் ஊதிய விகிதத்தை நிர்ணயிக்க வேண்டும். ஓய்வுபெறும் நாளில் பலன்களை வழங்க வேண்டும். 80 மாதங்களுக்கு மேல் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். 2003க்குப் பின் பணியில் சேர்ந்தோரையும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்னும் கோரிக்கைகளில், தொழிற்சங்கத்தினர் பிடிவாதமாக உள்ளனர்.
ஆகஸ்ட் 2க்குள் இவற்றை நிறைவேற்றாவிட்டால், வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் 'நோட்டீஸ்' வழங்கி உள்ளது. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூ.,வின் ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கம், முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளது. சில தொழிற்சங்கத்தினர், அரசு போக்குவரத்துக் கழகங்களை அரசு துறையாக அறிவிக்கும்படி கோரி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கோரிக்கைகளில் பெரும்பாலானவை, அரசின் கொள்கை முடிவைச் சார்ந்தது என்பதால், முதல்வர் நேரடியாக தலையிட வேண்டும் என, மற்ற தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.