சென்னை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அ.தி.மு.க., அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட 'சீல்' ஐ வருவாய்த்துறை அதிகாரிகள் திறந்தனர்.
சென்னையில் இம்மாதம் 11ம் தேதி, அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடக்கும்போது, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகம் முன், பழனிசாமி தரப்பினருக்கும், பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் நடந்தது. அதைத் தொடர்ந்து, கட்சி தலைமை அலுவலகத்துக்கு, 'சீல்' வைத்து, வருவாய் கோட்ட அதிகாரி உத்தரவு பிறப்பித்தார்.இந்த உத்தரவை எதிர்த்து, இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும், தனித்தனியே மனு தாக்கல் செய்தனர். அ.தி.மு.க., அலுவலகத்தை தங்களிடம் ஒப்படைக்கும்படி, இருவரும் கோரினர்.மனுக்களை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் , அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றுவதுடன், சாவியை பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்க வேண்டும். ஒரு மாதம் தொண்டர்கள் யாரும் அலுவலகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது. போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து தென்சென்னை ஆர்டிஓ மற்றும் மயிலாப்பூர் தாசில்தார் பாபு ஜெகஜீவன் ராம் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். அலுவலகத்தின் பிரதான நுழைவு வாயில், மெயின் கேட் உள்ளிட்ட 4 இடங்களில் வைக்கப்பட்டிருந்த 'சீல்' தாசில்தார் அகற்றினார். சீல் அகற்றப்பட்டது தொடர்பான ஆவணங்களில், அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் கையெழுத்து வாங்கினர். இதன் பின்னர் சாவியை முன்னாள் அமைச்சர் சண்முகம், மகாலிங்கம், துணை மேலாளர் மகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் வழங்கினர்.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.