சென்னை:தரக்குறைவாக விமர்சனம் செய்த நடிகர் பயில்வான் ரங்கநாதனை, நடுரோட்டில் பார்த்து நடிகை ரேகா நாயர் சண்டை போட்ட சம்பவம், சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குணசித்திர நடிகர் பயில்வான் ரங்கநாதன். இவர் சினிமா தொடர்பான செய்திகளை சேகரிக்கும் செய்தியாளராகவும் இருந்து வருகிறார். இவர், 'டிவி' மற்றும் 'யு டியூப்' தளங்களில், சினிமா தொடர்பான செய்திகளை வழங்கி வருகிறார். தற்போது, நடிகர், நடிகையரின் அந்தரங்க விஷயங்களை தெரிவிக்க துவங்கியுள்ளார்.
இதற்கு நடிகர், நடிகையரிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனாலும், பயில்வான் ரங்கநாதன் நிறுத்துவதாக இல்லை. பாடகி சுசித்ரா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். ரங்கநாதன் மீது நடவடிக்கை கோரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், சுசித்ரா புகார் அளித்துள்ளார்.முன்னணி நடிகையான ராதிகா, பயில்வான் ரங்கநாதனை அடிக்கப் பாய்ந்ததுடன், 'இத்துடன் நிறுத்திக் கொள்' என, எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகி உள்ள, இரவின் நிழல் படத்தில், நடிகை ரேகா நாயர், அரை நிர்வாணமாக நடித்துள்ளார். இவர், 2020ல் தற்கொலை செய்த 'டிவி' நடிகை சித்ராவின் தோழி. 'ரேகா நாயர், தன் முழு உடலையும் காட்ட தயாராக இருந்தார்' என, தன் நிகழ்ச்சியில் பயில்வான் ரங்கநாதன் ஆபாசமாக பேசியுள்ளார். இந்த பேச்சு, நடிகர், நடிகையரிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், பயில்வான் ரங்கநாதன் நேற்று முன்தினம் காலையில், சென்னை திருவான்மியூர் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அந்த நேரத்தில், ரேகா நாயரும் நடைபயிற்சியில் இருந்தார். எதிரே வந்த ரங்கநாதனை பார்த்ததும், ஆத்திரத்தில், தன்னை அறிமுகம் செய்து கொள்ளாமல், 'நடிகை ரேகா நாயர் பற்றி அசிங்கமாக பேசி இருக்கிறீர்களே?' எனக் கேட்டார்.
அதற்கு, 'பார்த்திபனிடம் போய் கேளு' என, ரங்கநாதன் கூறியதாக தெரிகிறது. அதைக் கேட்டதும் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற ரேகா, 'நான் அந்த காட்சியில் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன். நிர்வாணமாக கூட நடிப்பேன். அதை கேட்க நீ யார்?' என, கோபத்தில் கொந்தளித்துள்ளார். அதற்கு அவரும் ஆவேசமாக பதில் சொல்ல, 'செருப்பு பிஞ்சிரும்' என ரேகா அடிக்க பாய்ந்துள்ளார். அசிங்கமாகி விடும் என பயந்த ரங்கநாதன் ஓட்டம் பிடித்தார்.