வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருப்பூர் : திருப்பூர், கோவை மாவட்டங்களில் மட்டும், 10 லட்சம் தேசியக்கொடிகள் உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டின், 75வது சுதந்திர தினம் வரும் ஆக., 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பொதுமக்கள் தங்கள் வீடுகளில், ஆக., 13 முதல் 15 வரை, தங்கள் வீடுகளில் தேசியக்கொடியேற்றி, தேசிய கொடியுடன் நாட்டு மக்களின் இணைப்பை மேலும் வலுவாக்க வேண்டும் என, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளர். இதற்காக, திருப்பூரிலுள்ள கொடி உற்பத்தியாளர்களிடம் பெருமளவு ஆர்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
திருப்பூரை சேர்ந்த கொடி உற்பத்தியாளர் சரவணகுமார் கூறியதாவது:தற்போது, 75வது ஆண்டு சுதந்திர தினம் என்பதாலும், அரசு சார்பில், வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற அனுமதியும், வேண்டுகோளும் விடுக்கப்பட்ட நிலையில், இதற்கான ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளன.
![]()
|
தமிழகத்தை பொறுத்தவரை கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் எட்டு நிறுவனங்கள் மட்டுமே அதிகளவிலான கொடிகள் தயாரிக்கின்றன. வட மாநிலங்களிலிருந்து காகித மற்றும் பாலியஸ்டர் துணி கொடிகள் அதிகளவில் இங்கு விற்பனையாகிறது. இருப்பினும், காட்டன் துணி கொடிகள் உற்பத்தி இங்கு மட்டுமே தயாராகிறது.
தற்போதைய விலைவாசி உயர்வு உட்பட காரணங்களால், 15 சதவீதம் வரை இதன் விலை உயர்ந்துள்ளது. இதுவரை ஏறத்தாழ, 10 லட்சம் ஆர்டர்கள் வரப்பெற்று உற்பத்தி மும்முரமாக நடக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.