வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : 'மீண்டும் பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை' என்று, பா.ஜ., தலைவர்களிடம், அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பன்னீர்செல்வத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி, அ.தி.மு.க., பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலராக, பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தையும், பழனிசாமியிடம் ஒப்படைக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொருளாளராக இருந்த பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு, சீனிவாசன் நியமிக்கப்பட்டதை, வங்கிகள் ஏற்றுக் கொண்டுள்ளன.
இதனால் உற்சாகம் அடைந்துள்ள பழனிசாமி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, டில்லி சென்றுள்ளார். சில நாட்கள் டில்லியில் தங்கியிருக்க முடிவு செய்துள்ள பழனிசாமி, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
வரும், 2024 லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியை வீழ்த்த வேண்டுமானால், அ.தி.மு.க., ஒற்றுமையாக இருக்க வேண்டும் என, பா.ஜ., வலியுறுத்தி வருகிறது. பழனிசாமி - - பன்னீர்செல்வம் மோதல் ஏற்பட்ட உடனேயே, பிரச்னைகளை சுமுகமாக பேசி தீர்த்துக் கொள்ளுமாறு, இரு தரப்பையும் பா.ஜ., மேலிடம் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
இந்நிலையில் டில்லி சென்றுள்ள பழனிசாமியை நேற்றிரவு வரை, மோடியும், அமித்ஷாவும் சந்திக்கவில்லை. ஆனாலும், மோடி, அமித்ஷா தரப்பில் சிலர், பழனிசாமியை சந்தித்துப் பேசியுள்ளனர். 'தினகரன் கட்சியால், சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பாதித்தது. இப்போது மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டால், தி.மு.க.,வுக்கு தான் லாபம். எனவே, ஒற்றுமையாக செயல்படுங்கள்' என பழனிசாமியிடம் கூறியதாக, பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர்.
'இனி இரட்டை தலைமை சரிவராது. பன்னீர்செல்வத்திற்கு வெறும் இரண்டு சதவீத ஆதரவு மட்டுமே உள்ளது. அவர் தி.மு.க.,வுடன் இணைந்து செயல்படுகிறார். 'அவரால் கட்சிக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படுத்த முடியாது. அவருடன் மீண்டும் இணைந்து செயல்படுவது என்பது சாத்தியமல்ல' என்று பழனிசாமி திட்டவட்டமாக கூறியதாக தெரிகிறது.தன் ஆதரவு முன்னாள் அமைச்சர்கள், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மீது வருமான வரித் துறை, அமலாக்கத் துறை நடத்தும் சோதனைகள் குறித்தும், பா.ஜ., தலைவர்களிடம் பழனிசாமி அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது பற்றி, தன் ஆதரவாளர்களிடம் பேசிய பழனிசாமி, 'மோடியும், அமித்ஷாவும் அ.தி.மு.க., என்ற கட்சியைத் தான் ஆதரிப்பர். 'தனி நபர்களை ஆதரிக்க மாட்டார்கள். வருமான வரி சோதனைகள் எல்லாம் தற்காலிகமானவை' எனக் கூறி நம்பிக்கை ஏற்படுத்தியதாக, அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.