மதுரை : ''தி.மு.க., அறிவித்த மின்கட்டண உயர்வை ரத்து செய்வதுடன் இங்கிருந்து வெளிமாநிலங்களுக்கு குறைந்த விலைக்கு விற்கும் 6000 முதல் 8000 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்க வேண்டும்,'' என, மதுரையில் மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.தமிழக அரசு அறிவித்த மின்கட்டண உயர்வை கண்டித்து மதுரையில் மாநகர் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: 2003 வரை தமிழகத்தில் லாபத்தில் இயங்கிய மின்சாரத் துறை பின் சரிவை தொட்டது. தற்போது ரூ.ஒன்றரை லட்சம் கோடி கடனில் உள்ளது. தமிழக அரசு கடன் வாங்க முயன்றாலும் கொடுப்பதற்கு நாதியற்ற நிலையே உள்ளது. யாரும் தி.மு.க.,வை நம்பத் தயாராக இல்லை. அதனால் தான் மின்கட்டணத்தை உயர்த்த விரும்புகின்றனர்.மாநிலத்தில் 6000 முதல் 8000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு பிற மாநிலங்களுக்கு குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. நம் தேவைக்காக பிற மாநிலங்களிடம் இருந்து 3 மடங்கு அதிக விலையில் மின்சாரம் வாங்கப்படுகிறது.
டெண்டர் நடைமுறை இருந்தாலும் ஆபத்துகால நீதிக்கு ஏற்ப அரசு செயல்பட வேண்டும். ஆளத் தெரிந்தவர்களுக்கு இந்த விஷயம் தெரியும். தி.மு.க., மீண்டும் ஒரு கற்காலத்திற்கு மக்களை தள்ளிவிடப் போகிறது.தொழில்துறையில் முன்னோடியான தமிழகம் மின்கட்டண உயர்வால் நலிந்து போய் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலையை பறித்து நடுத்தெருவில் நிறுத்தி விடும். மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது. ரத்து செய்ய வேண்டும். கடனை எப்படி அடைப்பது என சிந்திக்க வேண்டும். என்றார்.