மதுரை : மதுரையில் இரு வேறு கட்டுமான நிறுவனங்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நான்கு நாட்களாக நடத்திய ரெய்டில் ரூ.165 கோடி ரொக்கம், 16 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.அரசு ஒப்பந்ததாரர் முருகவேல் என்பவர் 2016 க்கு முன் வரை சிறு சிறு கட்டுமான ஒப்பந்தங்களில் ஈடுபட்டு வந்தார். அதன் பின் அ.தி.மு.க., ஆட்சி பின்புலத்தில் அரசு ஒப்பந்தங்களான பாலம், மேம்பாலம், நெடுஞ்சாலை பணிகளை டெண்டர் எடுத்து வருமானம் ஈட்டினார். வருமானத்திற்கான வரியை செலுத்தாமல் ஆறாண்டுகளாக வரிஏய்ப்பு செய்து வந்துள்ளார்.
இவர் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மதுரை, திண்டுக்கல்லில் உள்ள முருகவேலுக்கு சொந்தமான வீடு, அலுவலகம், அவரது உறவினர், பணியாளர்களின் வீடு, அலுவலகங்களில் தொடர்ந்து 4 நாளாக சோதனை நடந்தது.முருகவேலிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
மதுரையில் மற்றொரு கட்டுமான நிறுவனமும் வரிஏய்ப்பு செய்ததை தொடர்ந்து அங்கும் சோதனை நடந்தது.இரண்டு நிறுவனங்களின் சோதனை முடிவில் ரூ.165 கோடி ரொக்கம், 16 கிலோ தங்க நகைகள், வரிஏய்ப்பில் வாங்கிய 12 ஆடம்பர கார்கள், 200 க்கும் மேற்பட்ட தங்க நாணயங்கள், ரியல் எஸ்டேட், கட்டுமானம், டெண்டர் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.