வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், 11ம் தேதி ரவுடிகளுடன் நுழைந்த பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அலுவலகத்தின் அசல் பத்திரத்தை கொள்ளை அடித்து சென்று விட்டதாகவும், மேலும் பல அசல் ஆவணங்களை காணவில்லை எனவும், போலீஸ் நிலையத்தில் ராஜ்யசபா எம்.பி., - - சி.வி.சண்முகம் புகார் அளித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில், அவர் அளித்துள்ள புகார் மனு:அ.தி.மு.க., தலைமை அலுவலகம், ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ளது. கடந்த 11ம் தேதி காலை 8:45 மணிக்கு, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், 300 அடியாட்கள் மற்றும் குண்டர்களுடன், கையில் ஆயுதங்களுடன் தன் பிரசார வாகனத்தில் வந்தார்.அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாகனம், துப்பாக்கி ஏந்திய காவலர்கள் முன்னே செல்ல, தலைமை அலுவலகம் சென்றார்.அவருடன், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன், கிருஷ்ணமூர்த்தி, புகழேந்தி, ராமச்சந்திரன், பாபு, கீதா போன்றோர் சென்றனர்.அடித்து நொறுக்கினர்
![]()
|
அடியாட்கள், சமூக விரோதிகள், அவ்வை சண்முகம் சாலையில் இருந்த அனைத்து வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். கட்சி தொண்டர்களையும், பொது மக்களையும் தாக்கினர். தலைமை அலுவலகம் பூட்டி இருப்பதை பார்த்ததும், 'அதை அடித்து உடையுங்கள்' என பன்னீர்செல்வம் சத்தம் போட, அவருடன் வந்தவர்கள் உடைத்தனர்.கட்டடத்தின் பிரதான கதவை காலால் மிதித்தும், கடப்பாரையால் அடித்தும் திறந்தனர். பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் வந்தவர்கள், தலைமை அலுவலகத்திற்குள் அத்துமீறி சென்றனர்.
இவை அனைத்தும், காவல் துறை முன்னிலையில் நடந்தன.தலைமை அலுவலகம் உள்ளிருந்த விலை உயர்ந்த பொருட்கள், முக்கிய ஆவணங்களை, பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் வந்தவர்கள் கொள்ளையடித்தனர்.பன்னீர்செல்வம் வந்த வேனில் அவற்றை ஏற்றினர். இது குறித்து மாவட்ட செயலர் ஆதிராஜாராம் புகார் அளித்தும், இன்று வரை வழக்கு பதியாமல் உள்ளது.முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், 8ம் தேதி, கட்சி அலுவலகத்துக்கு பாதுகாப்பு வேண்டி கொடுத்த புகாருக்கும், எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், வருவாய் துறையால் 'சீல்' வைக்கப்பட்டதை நீக்கி, இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமியிடம் தலைமை அலுவலகத்தை ஒப்படைக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.அதைத் தொடர்ந்து, 21ம் தேதி என் முன்னிலையில் சீல் நீக்கப்பட்டு, சாவியை ஒப்படைத்தனர்.அலுவலகம் உள்ளே சென்று பார்த்தபோது, அனைத்து அறைகளும், கடப்பாரையால் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன. அலுவலக கணக்கு அறை உள்ளே இருந்த பீரோவை உடைத்து, தலைமை அலுவலகத்தின் அசல் பத்திரம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.
மேலும், சென்னை அண்ணா சாலையில் உள்ள இடத்திற்கான அசல் பத்திரம், கோவை, திருச்சி, புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களின் அசல் பத்திரம், சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள, அண்ணாதுரை அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தின் அசல் பத்திரம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளன.மேலும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தங்கக்கவசம், மதுரை பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வைக்கப்பட்டதற்கான பாஸ் புக், அது சம்பந்தமான அசல் ஆவணங்கள், பீரோவில் இருந்த 31 ஆயிரம் ரூபாய், கணக்கு வழக்கு விபரங்கள் அடங்கிய இரண்டு கணினிகளும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.ஒரு வெள்ளி வேல், இரண்டு வெண்கல குத்து விளக்குகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. மொத்தம் 31 மோட்டார் வாகனங்களின் அசல் பதிவு சான்றிதழ்கள், வங்கிகள், வருமான வரி அலுவலகம் மற்றும் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யப்பட்ட ஆவண நகல்கள், கட்சி பதிவு சான்று, தேர்தலின்போது பெறப்பட்ட விருப்ப மனு, விண்ணப்ப கட்டண ரசீது புத்தகங்களும் கொள்ளை போயுள்ளன.சொத்துக்கள் சூறையாடல்கணினி அறையில் இருந்த கட்சி சட்டத் திட்ட விதிகள், பொறுப்பு நியமனங்கள் தொடர்பான அறிவிப்புகள், கூட்டணி கட்சிகளுடன் செய்த ஒப்பந்த கடிதங்கள், மாவட்ட செயலர்கள் வழங்கிய பரிந்துரை கடிதங்கள், தி.மு.க., அரசை கண்டித்து வெளியிடப்பட்ட அறிக்கைகளையும் காணவில்லை.
கட்சி அலுவலகம் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அடித்து சேதப்படுத்தி உள்ளனர். 'பேனர்'களில் பழனிசாமி படங்கள் மட்டும் கிழிக்கப்பட்டுள்ளன. பன்னீர்செல்வத்துடன் வந்தவர்கள், கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து, கட்சி சொத்துக்களை சூறையாடி உள்ளனர்.
அங்கிருந்த விலை உயர்ந்த பொருட்கள், அசல் ஆவணங்களை கொள்ளையடித்து சென்று உள்ளனர். அவர்கள் மீது, தக்க சட்ட நடவடிக்கை எடுத்து, கொள்ளையடித்து சென்ற அனைத்து அசல் ஆவணங்கள், பணம் மற்றும் பரிசு பொருட்களை மீட்டுத் தர வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.கொள்ளை!