வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழகத்தில் அதிக வருமான வரி செலுத்தியதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விருது வழங்கினார். அவர் பேசுகையில், ‛ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல; சூப்பர் டாக்ஸ் பேயர்' என புகழ்ந்துள்ளார்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டை மியூசிக் அகாடமியில் வருமான வரி தினம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் அதிக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்துக்கு வருமான வரித்துறை சார்பில் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்க, ரஜினிக்கு பதிலாக அவரது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். அதிக வரி செலுத்திய விருது ரஜினிக்கு அளிக்கப்பட்டதை பாராட்டி அவரது ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை பேசியதாவது: ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல; சூப்பர் டாக்ஸ் பேயர். பிரதமர் நரேந்திர மோடியின் தொடர் முயற்சியால், பொதுமக்கள் முறையாக வரி செலுத்த முன்வந்துள்ளனர். அனைவரும் கண்டிப்பாக வரி செலுத்த வேண்டும். அரசுக்கு வரியை முறையாக செலுத்தாவிட்டால், நாம் இருப்பதையும் இழந்துவிடுவோம். வருமான வரி செலுத்த கடைசி நாள் இது என்று அறிவித்தாலும், மக்கள் கால நீட்டிப்பை எதிர்பார்க்கின்றனர். கிராமப்புற பள்ளிகளை மேம்படுத்த வருமானவரித்துறை பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 2025ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை இந்தியா அடைய, பிரதமர் மோடி உழைத்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.