ராய்ப்பூர் : சத்தீஸ்கரில் சாலையோரத்தில் இருந்து எடுத்த 45 லட்சம் ரூபாயை, போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த போக்குவரத்து போலீஸ்காரரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அருகே நவா ராய்ப்பூரின் கயாபந்தா போக்குவரத்து பிரிவில் கான்ஸ்டபிளாக பணியாற்றுபவர் நிலம்பர் சின்ஹா. இவர், நேற்று காலை மானா நகரில் சாலையோரத்தில் கேட்பாரற்று கிடந்த ஒரு பையை எடுத்து ஆய்வு செய்தார். அதில், 45 லட்சம் ரூபாய் பணம் இருந்தது. அதை, அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். ராய்ப்பூர் மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் நிலம்பர் சின்ஹாவை பாராட்டினர். அவருக்கு பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. பணம் இருந்த பை யாருக்கு சொந்தமானது என விசாரணை நடக்கிறது.