வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : 'மறுசுழற்சி செய்யப்படாத கழிவு நீர் மற்றும் தொழிற்சாலை கழிவுகள், கங்கை நதியில் கலப்பது தொடர்கிறது. வெறும் கண்காணிப்பு நடவடிக்கையில் மட்டும் ஈடுபடாமல், விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என, தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது.
கங்கை நதியை துாய்மைப்படுத்தும் வகையில், 'தேசிய கங்கை துாய்மை' இயக்கம் துவக்கப்பட்டது. தேசிய கங்கை கவுன்சிலின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. மாசடைந்துள்ள கங்கையை துாய்மைப்படுத்துவது குறித்து, 2016ல் உச்ச நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்தது.கங்கை துாய்மை குறித்து, தேசிய பசுமை தீர்ப்பாயமும் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு, தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஆதேஷ் குமார் கோவில் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு கூறியதாவது:கங்கை துாய்மை குறித்த வழக்கை மிக நீண்ட காலமாக விசாரித்து வருகிறோம். கடந்த 37 ஆண்டுகளுக்கு மேலாக கங்கையை துாய்மைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
![]()
|
ஆனால், இப்போதும் மறுசுழற்சி செய்யப்படாத கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் கங்கையில் கலக்கப்படுவது, 50 சதவீதம் அளவுக்கு உள்ளது. இதற்கு தீர்வு தான் என்ன?தேசிய கங்கை கவுன்சில் வெறும் திட்டத்தை செயல்படுத்தும் அமைப்பாகவே உள்ளது. விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க அதற்கு அதிகாரம் இல்லை.
நடவடிக்கை எடுப்பதில் மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள் உள்ளிட்டவை தயக்கம் காட்டுகின்றன. இத்தனை ஆண்டுகளாக சில வழிமுறைகளை பயன்படுத்தி கங்கை துாய்மை பணி நடந்து வந்துள்ளது. இதில் உரிய பலன் கிடைக்கவில்லை. அதனால் மாற்று வழிமுறைகளை தேசிய கங்கை கவுன்சில் மேற்கொள்ள வேண்டும்.
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பது, கங்கையில் கழிவுநீரை கலந்தால் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுப்பது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அமர்வு கூறியுள்ளது. வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.