புதுடில்லி : புதுடில்லி அரசு நடத்தும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் படத்துடன் கூடிய பேனர் வைக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு அமைந்துள்ளது. மாநில வனத் துறை அமைச்சகத்தின் சார்பில், அசோலா வனப் பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் நேற்று காலை அறிவித்தார்.
அவர் கூறியதாவது: இது மாநில அரசு நடத்தும் விழா. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதாக, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புதுடில்லி போலீசார், நேற்று முன்தினம் விழா நடக்கும் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர். அங்கு வைக்கப்பட்டிருந்த முதல்வர் கெஜ்ரிவாலின் படத்துடன் கூடிய பேனர்களை அவர்கள் அகற்றினர். பிரதமர் மோடியின் படத்துடன் கூடிய பேனர் வைத்தனர்.
புதுடில்லி அரசின் விழாவை, மத்திய அரசின் விழாவாக காட்ட முயற்சி நடக்கிறது. இதை கண்டித்து நிகழ்ச்சியை புறக்கணிக்க முதல்வர் கெஜ்ரிவாலும், நானும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.