சென்னை : தமிழகத்தில் 32வது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் முகாமை துவக்கி வைத்த பின் அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள இன்னும் பலர் தயக்கம் காட்டுகின்றனர். கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்பால் நம் நாட்டில் தினமும் 50 முதல் 60 பேர் இறக்கின்றனர். தடுப்பூசி போட்டவர்களுக்கு மிதமான பாதிப்பு உள்ளது. ஆகவே தடுப்பூசி மட்டுமே இந்த நோய்க்கு தீர்வு.உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட் ரோஸ் '110 நாடுகளில் பி.ஏ. 4 பி.ஏ.5 வகை தொற்று பரவல் வேகமாகி அச்சுறுத்தலாக உள்ளது' என்று கூறியுள்ளார்.
ஆகவே மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் 32வது தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.பூஸ்டர் டோஸ் தடுப்பூசி 75 நாட்களுக்கு இலவசமாக போடப்பட உள்ளது. செப்டம்பருக்குள் இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு பின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு 386 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்படும்.இப்போது 63 நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு உள்ளது.
நம்நாட்டில் கேரளாவில் மூன்று பேருக்கும்; தெலுங்கானா டில்லியில் தலா ஒருவருக்கும் குரங்கம்மை பாதிப்பு உள்ளது. இதனால் சர்வதேச விமான நிலையங்கள் தீவிரமாக கண்காணிக்கப் படுகின்றன. கேரள மாநில எல்லையின் 13 வழிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்றார்.