சென்னை : ''கருணாநிதி நினைவிடத்தில் பேனா வைப்பது, ஏற்கனவே திட்டமிட்ட பணி தான். புதிதாக திட்டமிட்டது போல செய்தி வருகிறது,'' என, பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு கூறினார்.
சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:
கருணாநிதி நினைவிடத்தில் பேனா வைப்பது, ஏற்கனவே திட்டமிட்ட பணி தான். புதிதாக திட்டமிட்டது போல செய்திகள் வருகின்றன. இரண்டு பகுதிகளாக பிரித்து, பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டோம். முதல் பகுதிக்கு மாவட்ட, மாநில சுற்றுச்சூழல் துறை, கடற்கரை ஒழுங்கு மண்டல அனுமதி கிடைத்ததால் பணிகள் நடக்கின்றன.
இரண்டாவது பகுதிக்கு, மாவட்ட சுற்றுச்சூழல் துறை வாயிலாக, மாநில பிரிவிற்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் பணிகள் துவங்கும். பிரமாண்ட பேனா வைப்பது குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். இது, தமிழக வளர்ச்சிக்காக பாடுபட்ட கருணாநிதிக்கு செய்யும் துரோகம்.
இவ்வாறு வேலு கூறினார்.