கள்ளக்குறிச்சி: கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தடயவியல் துறை குழுவினரின் ஆய்வு பணிகள் நிறைவடைந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 பயின்ற மாணவி ஸ்ரீமதி கடந்த 13ம் தேதி இறந்தார். இதுதொடர்பாக கடந்த 17ம் தேதி இளைஞர்கள் மாணவர்கள் சார்பில் நடந்த போராட்டம் கலவரமாக மாறியது.கலவரம் தொடர்பான குற்றவாளிகளை கண்டறிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கின் விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உதவிடும் வகையில் விழுப்புரம் மண்டல தடயவியல் துறை துணை இயக்குநர் சண்முகம் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கலவரத்தில் போராட்ட குழுவினர் எந்த வகையான ஆயுதங்களை பயன்படுத்தினர் பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை ஏதேனும் பயன்படுத்தியுள்ளனரா வெளி நபர்கள் வந்து செல்வதற்கான தடயங்களை விட்டுள்ளனரா சி.சி.டி.வி. வீடியோ ஆதாரங்கள் கடிதங்கள் உள்ளதா என தடயங்களை தடயவியல் குழுவினர் சேகரித்தனர்.
கடந்த ஒரு வாரமாக நடந்த தடயவியல் குழுவினரின் ஆய்வு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. இவர்கள் சேகரித்த தடயங்களின் கோப்புகளை சிறப்பு புலனாய்வு குழுவுக்கும் சி.பி.சி.ஐ.டி. க்கும் சமர்ப்பிக்க உள்ளனர்.அதேபோல் கைரேகை பிரிவு அலுவலர்களின் ஆய்வு பணிகளும் நிறைவடைந்தது. வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு அலுவலர்கள் பள்ளி வளாகத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.