சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை பரப்பும் 'ஏடிஸ் - எஜிப்டை' வகை கொசுக்கள் அதிகரிக்க துவங்கியுள்ளன.
அதனால், டெங்கு காய்ச்சல் மற்றும் பருவ கால நோய்களால், மக்கள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.தமிழக மருத்துவ பணிகள் கழக மேலாண் இயக்குனர் தீபக் ஜேக்கப் அளித்த பேட்டி:பருவ கால நோய்களுக்கு தேவையான மருந்துகளும், மருத்துவ பொருட்களும், தமிழகத்தில் முன்கூட்டியே கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சில மாதங்களுக்கு முன், டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களுக்கும், மழைக்கால காய்ச்சல்களுக்கும் சிகிச்சை அளிப்பதற்கான மாத்திரைகள் வாங்கப்பட்டுள்ளன. டெங்குவுக்கு வழங்கப்படும், 'ஓசல்டாமிவிர்' மாத்திரைகள், மூன்று லட்சம் வரை கையிருப்பில் உள்ளன. காய்ச்சலுக்கு தேவையான 'பாராசிட்டமால்' மாத்திரை, தொண்டை அடைப்பான், ரணஜன்னி, கக்குவான் இருமலுக்கான, 'டிபிடி' உள்ளிட்ட மருந்துகள், மூன்று மாதங்களுக்கு தேவையான அளவில் உள்ளன. நீரில் உள்ள கிருமிகளை அழிப்பதற்கான 'குளோரின்' மருந்தும் போதிய அளவில் உள்ளது. எனவே, மருந்து தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.