ஏற்கனவே நான்கு லோக்சபா எம்.பி.க்கள் இந்த கூட்டத்தொடர் முழுக்க 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று ராஜ்யசபாவிலும் 19 எம்.பி.க்கள் இந்த வாரத்தில் மீதமுள்ள நாட்கள் முழுதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஆறு பேர் தி.மு.க. உறுப்பினர்கள்.
மழைக்கால கூட்டத்தொடர் துவங்கிய நாளில் இருந்தே விலைவாசி உயர்வு பிரச்னையை மையமாக வைத்து காங். - தி.மு.க. - திரிணமுல் காங். உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
ஒத்தி வைப்பு
முதல் வாரம் முழுக்கவே அலுவல்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டாவது வாரமான நேற்று முன்தினம் இரு சபைகளிலும் அமளி நீடித்தது. லோக்சபாவில் நான்கு காங். - எம்.பி.க்கள் இந்த கூட்டத்தொடர் முழுக்க சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று காலை ராஜ்யசபா கூடியதும் முதல் அலுவலாக கார்கில் போர் வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. அது முடிந்ததுமே குஜராத்தில் விஷச் சாராயம் குடித்து பலரும் பலியான சம்பவத்தை எதிர்க்கட்சிகள் கிளப்பவே சபை சூடானது.
இந்தப் பிரச்னையில் ஆம் ஆத்மி எம்.பி.க்கள் ஆவேசம் காட்டினர். மற்ற எதிர்க்கட்சியினர் வழக்கம்போல விலைவாசி உயர்வு பிரச்னைக்காக அமளியில் இறங்கவே ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு சபையை ஒத்திவைத்தார்.ஒரு மணி நேரம் கழித்து சபை மீண்டும் கூடியபோது ஜி.எஸ்.டி. வரி உயர்வை திரும்ப பெற வேண்டுமென கோஷங்கள் எழுப்பியும் கைகளை தட்டியும் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.அப்போது துணை தலைவர் ஹரிவன்ஷ் நாராயண்சிங் ''இது சபை விதிகளுக்கு முரணான செயல்'' என எச்சரிக்கை விடுத்தும் பலனில்லாமல் போகவே சபை ஒத்தி வைக்கப்பட்டது.
கோரிக்கை
சபை மீண்டும் மதியம் கூடியபோது தான் பிரச்னை பெரிதானது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபையின் மையப்பகுதியில் 'போஸ்டர்'களுடன் முற்றுகையிட்டு அமளியில் ஈடுபடவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பார்லி. இணையமைச்சர் முரளீதரன் கோரிக்கை வைத்தார். அப்போது அவர் 10 எம்.பி.க்களின் பெயர்களை வாசித்தார்.
ஆனால் சபையின் துணை தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தி.மு.க.வைச் சேர்ந்த ஆறு எம்.பி.க்கள் உட்பட 19 பேர் இந்த வாரத்தின் மீதமுள்ள நாட்கள் முழுதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவித்தார்.இதன்பின்னும் அவர்கள் சபையை விட்டு வெளியேற மறுக்கவே சபை நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டது.
நேற்று லோக்சபாவும் பெரும் அமளியை சந்தித்தது.எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காங். - எம்.பி.க்கள் மீதான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டுமென கோரிக்கை வைத்தனர். விலைவாசி உயர்வு பற்றி விவாதம் நடத்தவும் அனுமதி கேட்டனர். எதுவும் நடக்காமல் போகவே அமளி அதிகமானது.
அப்போது சபாநாயகர் ஓம்பிர்லா ''இது உங்களின் சபை. போஸ்டர்களை எடுத்து வராதீர்கள். எனக்கு உங்கள் மீது நடவடிக்கை எடுக்க விருப்பமில்லை'' என்றார்.ஆனாலும் அமளி தொடரவே லோக்சபாவும் ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் மதியத்துக்கு மேல் குடும்ப நல கோர்ட்டுகள் மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.
பரபரப்பு
ஏற்கனவே நான்கு லோக்சபா எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் ராஜ்யசபாவிலும் 19 எம்.பி.க்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால் எதிர்க்கட்சிகளின் ஆவேசம் அதிகரித்துள்ளது.இதனால் மழைக்கால கூட்டத்தொடரின் மீதமுள்ள நாட்களில் அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான மோதல் தீவிரமாகும். முன்பு சுமித்ரா மகாஜன் சபாநாயகராக இருந்தபோது அமளியில் ஈடுபட்டதாக கூறி அ.தி.மு.க. தெலுங்கு தேசம் கட்சிகளைச் சேர்ந்த 43 எம்.பி.க்கள் ஒரே நேரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அதன்பின் ஒட்டுமொத்தமாக இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இப்போது தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்னர். இதனால் பார்லி.யில் பரபரப்பு காணப்படுகிறது.
சஸ்பெண்ட் செய்யப்பட்டதி.மு.க., - எம்.பி.,க்கள்
1. கனிமொழி சோமு
2. கல்யாணசுந்தரம்
3. கிரிராஜன்
4. இளங்கோ
5 முகமது அப்துல்லா
6. சண்முகம்