புதுடில்லி : 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை விலைக்கு வாங்கியதில் நடந்த மோசடி தொடர்பாக, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாவிடம், அமலாக்கத் துறையினர் இரண்டாவது நாளாக, நேற்றும் விசாரணை நடத்தினர். இதில், பல கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை, காங்கிரஸ் தலைவர் சோனியா, அவருடைய மகன் ராகுல் உள்ளிட்டோர் இயக்குனர்களாக உள்ள, 'யங் இந்தியா' நிறுவனம் விலைக்கு வாங்கியது. இதில் மோசடி நடந்து உள்ளதாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி, 2013ல் வழக்கு தொடர்ந்தார்.
வழக்குப் பதிவு
இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை கடந்தாண்டு இறுதியில் வழக்குப் பதிவு செய்தது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பவன் பன்சால் ஆகியோரிடம், ஏற்கனவே விசாரணை நடந்தது.இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி, சோனியா மற்றும் ராகுலுக்கு, அமலாக்கத் துறை 'சம்மன்' அனுப்பியிருந்தது. இதன்படி, கடந்த மாதம் ஆஜரான ராகுலிடம், ஐந்து நாட்களில், 50 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இதற்கிடையே, கொரோனா தொற்று ஏற்பட்டதால், விசாரணைக்கு ஆஜராக சோனியா அவகாசம் கேட்டிருந்தார். இதையடுத்து, அவருக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டது. புதிய சம்மனை ஏற்று, கடந்த 21ல், அவர் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம், இரண்டு மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, 26ல் மீண்டும் ஆஜராக, சம்மன் அனுப்பப்பட்டது.
இதையேற்று, அமலாக்கத் துறை அலுவலகத்தில், சோனியா நேற்று மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார். அவருடன் மகன் ராகுல், மகளும், பொதுச் செயலருமான பிரியங்கா உடன் சென்றனர். அமலாக்கத் துறை அலுவலகம் வரை சென்று ராகுல் திரும்பினார். ஆனால், அவசர உதவி தேவைப்படலாம் என்பதால், அலுவலக வளாகத்தில் இருக்க, பிரியங்காவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

28 கேள்விகள்
நேற்று காலை 11:00 மணிக்கு வந்த சோனியாவிடம், வருகைப் பதிவு உள்ளிட்ட நடைமுறைகள் நடந்தன. பின், 11:30 மணிக்கு துவங்கி, மதியம் 2:00 மணி வரை விசாரணை நடந்தது. மதிய உணவு இடைவேளைக்குப் பின், மீண்டும் மாலை 3:00 மணிக்கு துவங்கியவிசாரணை, 6:00 மணி வரை, மொத்தம் ஆறு மணி நேரம் நடந்தது. இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜாராகும் படி சோனியாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்றைய விசாரணையின் போது, சோனியாவிடம், 28 கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. யங் இந்தியா நிறுவனத்தில் அவருடைய பங்கு, அவருடைய செயல்பாடு, அதன் நிதி செயல்பாடுகள், நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வாங்கியதில் நடந்த பரிவர்த்தனை உட்பட, பல கேள்விகள் கேட்கப்பட்டன.இவற்றுக்கு அவர் அளித்த பதில்கள் பதிவு செய்யப்பட்டன. மேலும், ராகுல் அளித்த பதில்களோடு, சோனியா அளித்த பதில்கள் ஒத்துப் போகின்றனவா என்பதும் சரிபார்க்கப்பட்டது.
காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக ஏவிவிட்டு, மத்திய அரசு தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறது. விலைவாசி உயர்வு, பல பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து, பார்லிமென்டில் விவாதிக்க வலியுறுத்துகிறோம். ஆனால், மத்திய அரசு இதில் பிடிவாதம் காட்டுவதால், பார்லிமென்ட் செயல்படாமல் முடங்கிஉள்ளது. இந்த விவகாரத்தில் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ராகுல் ஆஜரான அனைத்து நாட்களிலும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதுபோல, சோனியா முதல் முறையாக ஆஜரான போதும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாவது நாளாக, நேற்று அவர் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரான போதும், காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.முன்னதாக, பார்லிமென்ட் வளாகத்தில் கூடி, காங்., - எம்.பி.,க்கள் ஆலோசனை நடத்தினர். பின், கோஷங்கள் எழுப்பினர். அடுத்து, புதுடில்லியின் விஜய் மார்க் பகுதியில், ராகுல் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதி மாளிகைக்கு பேரணியாக செல்ல முயன்ற அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர்.இதையடுத்து, ராகுல் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அவர் கைது செய்யப்பட்டு, போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார். மற்ற எம்.பி.,க்கள், மூத்த தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.''இது போலீஸ் ராஜ்ஜியம். பிரதமர் மோடி தான் இதன் ராஜா,'' என, கைது செய்யப்பட்ட போது, ராகுல் குறிப்பிட்டார்.