விருதுநகர் : விருதுநகர் மாவட்ட ஹோட்டல்களில் சேகரிக்கப்பட்ட, 15 ஆயிரம் கிலோ பழைய எண்ணெய் தனியார் முகமையில் ஒப்படைக்கப்பட்டது. கிலோ 30 ரூபாய்க்கு வாங்கப்படுவதால் ஹோட்டல் வியாபாரிகளும் ஆர்வத்துடன் ஒப்படைத்து வருகின்றனர்.
உணவு பாதுகாப்புத்துறையினரின் வழிகாட்டுதல் குழு கூட்டத்தில் உணவு எண்ணெய்யை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்த கூடாது என்றும், பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை 'ருக்கோ' என்ற அங்கீகரிக்கப்பட்ட சேகரிப்பு முகமையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அந்த தனியார் அமைப்பு, 1 கிலோ பழைய எண்ணெய்யை, 30 ரூபாய்க்கு வாங்கி 'பயோ' டீசல் உற்பத்திக்கு அனுப்புகிறது.
மாவட்டம் முழுவதும் மாதந்தோறும் 250 முதல் 300 கிலோ வரை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 8 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த, 2022 ஜனவரி முதல் ஜூன் வரை, 15 ஆயிரம் கிலோ பழைய எண்ணெய் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உடனடியாக பணம் கிடைப்பதால் ஹோட்டல் வியாபாரிகள் ஆர்வத்துடன் ஒப்படைத்து வருகின்றனர்.
உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செல்வராஜன் கூறியதாவது:பழைய எண்ணெய்யை மீண்டும் உணவுக்கு பயன்படுத்த கூடாது. மீறி பயன்படுத்தும் போது கெட்ட கொழுப்பு சேர்ந்து உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.ஜூலையில் மட்டும் 1,500 கிலோ சேகரிக்கப்பட்டது. தற்போது விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. பழைய எண்ணெய்யை ஒப்படைக்காமல் மீண்டும் பயன்படுத்துவோருக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது. மீறி தொடர்ந்து பயன்படுத்தினால் வழக்கு போடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.