சென்னை : ''பொது மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது, உடனடியாக தீர்வு காண வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
சென்னை, சோழிங்கநல்லுாரில் அமைந்துள்ள, முதல்வர் அழைப்பு மையத்தை, நேற்று முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது, பொது மக்களின் தொலைபேசி அழைப்புகளை ஏற்று, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.வீட்டுமனைப் பட்டா பெற்ற, அடையாறு பகுதியைச் சேர்ந்த பயனாளியிடமும், முதியோர் ஓய்வூதியம் பெற்ற, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பயனாளியிடமும், முதல்வர் உரையாடினார்.
திருப்பூர் வடக்கு தாசில்தாரை தொடர்பு கொண்ட ஸ்டாலின், 'முதல்வரின் முகவரி' துறையில் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது, விரைவாக நடவடிக்கை எடுத்து, தீர்வு கண்டதற்காக பாராட்டினார்.திருச்சி தொழிலாளர் நல உதவி ஆணையரிடம் பேசிய முதல்வர், பெறப்பட்ட மனுக்கள் மீது, தாமதமின்றி விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காண உத்தரவிட்டார்.
மாநிலத்தில், அனைத்து தரப்பில் இருந்து பெறப்படும் மனுக்கள், ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த மாதம் 7 முதல் நேற்று வரை, 26.43 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.அனைத்து பணிகளையும் ஆய்வு செய்த முதல்வர், அனைத்து மனுக்களையும், கோரிக்கைகளின் தன்மைக்கேற்ப பகுத்தாய்வு செய்து, விரைவாகவும், உரிய முறையிலும் தீர்வு காண, அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அமைச்சர் அன்பரசன், முதல்வரின் முகவரி துறை சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், முதல்வரின் தனிப் பிரிவு தனி அலுவலர் ராம்பிரதீபன் உடனிருந்தனர்.