சென்னை : இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, கோப்புக்கு எடுக்கப்படாமல் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை விபரங்களை அளிக்கும்படி, கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கும், டி.ஜி.பி.,க்கும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு குற்ற வழக்கில் விசாரணையை விரைந்து முடித்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய, கிருஷ்ணகிரி போலீசாருக்கு உத்தரவிடக் கோரிய மனு, உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன், விசாரணைக்கு வந்தது.போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இந்த வழக்கில், 2020ம் ஆண்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ஆனால், இன்னும் கோப்புக்கு எடுக்கப்படவில்லை' என்றார்.
இதையடுத்து, குற்றப்பத்திரிகை நகல் கோரி விண்ணப்பித்தபோது, எந்த அறிக்கையும் தாக்கல் ஆகவில்லை எனக் கூறி, அதை, கீழமை நீதிமன்றம் திருப்பி அனுப்பி விட்டதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, நீதிபதி சதீஷ்குமார், 'இதேபோன்ற புகார்களுடன், பல மனுக்கள் தாக்கல் ஆகின்றன. 'எனவே, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, கோப்புக்கு எடுக்கப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை விபரங்களை, கீழமை நீதிமன்ற நீதிபதிகள் அளிக்க வேண்டும். அதேபோல், டி.ஜி.பி.,யும் அறிக்கை அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.
இறுதி அறிக்கை தாக்கல் ஆன உடன், அதில் தேதி, நேரத்தை குறிப்பிடும்படி, கீழமை நீதிமன்ற ஊழியர்களுக்கும், நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை, ஆகஸ்ட் 16க்கு தள்ளி வைத்தார்.