சென்னை : 'வீடுகள் தோறும் தேசியக் கொடி ஏற்ற வசதியாக, ஆகஸ்ட் 1 முதல், நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, மத்திய கலாசாரத் துறை செயலர் கோவிந்த் மோகன், சுகாதாரத் துறை இணைச் செயலர் லாவ் அகர்வால், தகவல் ஒளிபரப்புத் துறை செயலர் அபூர்வ சந்திரா ஆகியோர், 'வீடியோ கான்பிரன்ஸ்' வாயிலாக அளித்த பேட்டி:
இந்தியாவின் 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி, 'வீடுதோறும் மூவர்ணக் கொடி' என்ற இயக்கத்தை, பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதன் வாயிலாக, ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை, 20 கோடி வீடுகளில் தேசியக் கொடி ஏற்றப்பட உள்ளது.அதற்கு வசதியாக, தேசியக் கொடி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, கதர் மட்டுமல்லாது, 'பாலியஸ்டர்' உள்ளிட்ட பல வகைத் துணிகளில், தேசியக் கொடி தயாரிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
அனைவருக்கும் தேசியக் கொடி கிடைக்க, பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஆகஸ்ட் 1 முதல், நாடு முழுதும் உள்ள, 1.60 லட்சம் தபால் நிலையங்களில் தேசியக் கொடிகள் விற்கப்படும். மத்திய அரசின் 'ஜெம்' விற்பனை இணையதளம் வாயிலாகவும் கொடிகளை விற்பனை செய்யலாம்.வீடுகளில் தேசியக் கொடியேற்றி 'செல்பி' படம் எடுத்து, www.harghartiranga.com என்ற இணையதளத்தில் பதிவிடலாம்.
சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி, கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக 'பூஸ்டர்' தடுப்பூசி செலுத்தும் பணி, செப்டம்பர் 30 வரை மேற்கொள்ளப்படும்.உலக அளவில் ஒப்பிடும்போது, இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், இறந்தவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.