பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:மின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ள தமிழக அரசு, மின் மீட்டருக்கு வாடகை வசூலிக்க வும் தீர்மானித்துள்ளது. நகர்ப்புறங்களில் இப்போதிருக்கும் டிஜிட்டல் மீட்டர்களுக்கு இரு மாதங்களுக்கு, 120 ரூபாயும், இனி பொருத்தப்படவுள்ள ஸ்மார்ட் மீட்டர்களுக்கு, 350 ரூபாயும் வாடகை வசூலிக்கப்பட உள்ளது. இது, மக்கள் மீதான பொருளாதார தாக்குதல். மின்சாரம் வழங்குவது மின் வாரியத்தின் சேவை. மின் பயன்பாட்டை கணக்கிட வேண்டியதும் மின் வாரியத்தின் பணி. அதற்கான செலவுகளை மக்கள் மீது சுமத்தக்கூடாது.
அதானே... ஹோட்டலில் சாப்பிட்ட பண்டத்துக்கு மட்டும் பில் போடாம, சாப்பிட்ட தட்டுக்கும் கட்டணம் வசூலிக்கிற கதையாக அல்லவா உள்ளது!
தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா அறிக்கை: அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட, பல்வேறு திட்டங்களை, நிதி இல்லை எனக்கூறி, தமிழக அரசு முடக்கி விட்டது. எனவே, கருணாநிதி நினைவிடத்தில், 81 கோடி ரூபாயில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கும் முடிவை, அரசு கைவிட வேண்டும். மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காமல், ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்.
ஏழை பெண்களுக்கு மிகவும் உதவியாக இருந்த, 'தாலிக்கு தங்கம்' திட்டத்தை நிறுத்திய தமிழக அரசு, 81 கோடி ரூபாயில் பேனா சின்னம் வைப்பதை ஏற்கவே முடியாது!
ஹிந்து மக்கள் கட்சி தலைவர் ராம ரவிகுமார் அறிக்கை: தமிழகத்தில் பள்ளி மாணவ - மாணவியர், மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால், தற்கொலை செய்து கொள்வது போன்ற மரண சம்பவங்களை தவிர்க்க, அனைத்து அரசு பள்ளிகளிலும், மனநல ஆலோசகர் ஒருவரை நியமிக்க வேண்டும்.
பள்ளிகளுக்கு தேவையான ஆசிரியர்களையே நியமிக்க முடியாம, தற்காலிக அடிப்படையில ஆள் எடுத்துட்டு இருக்காங்க... இதுல, மனநல ஆலோசகரை எதிர்பார்ப்பது எல்லாம், 'டூ மச்!'
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: உறுதி அளித்தபடி முதியோர் உதவித்தொகையை உயர்த்தவில்லை என்றாலும், ஏற்கனவே வழங்கப்பட்டதை குறைப்பதும், புதியவர்களுக்கு வழங்க மறுப்பதும், பச்சை துரோக மாகும். பழனிசாமி அரசு ஆரம்பித்த, இந்த படுபாதகத்தை ஸ்டாலின் அரசும் தொடர்வது வேதனைக்கு உரியது.

'அடுத்த தேர்தலுக்கு இப்ப இருக்கிற முதியோர் ஓட்டுகள் தேவைப்படாது' என, 'மாத்தி யோசிச்சிட்டாங்களோ' என்னவோ?
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: மறைந்த கருணாநிதி பேனாவுக்கு, 81 கோடி ரூபாயில் சிலை வைப்பது, தேவையில்லாத ஒன்று. இந்த பணத்தில் தமிழகம் முழுதும், போதை மறுவாழ்வு மையங்களை அமைக்கலாம்.
அதெப்படி... போதை மறுவாழ்வு மையங்கள் அமைத்தால், 'டாஸ்மாக்' விற்பனை படுத்து விடுமே!