வரலாற்று சிறப்புமிக்க மாமல்லையில், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று துவங்குகிறது. இதற்கான கோலாகல விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி சென்னை வருகிறார்.இந்தியாவில் முதன்முறையாக, சர்வதேச சதுரங்கப் போட்டியான, 44வது செஸ் ஒலிம்பியாட் தமிழகத்தில் நடக்கிறது. சென்னை அடுத்த மாமல்லபுரத்தில், நாளை முதல் ஆக., 9 வரை போட்டிகள் நடக்க உள்ளன. ஆக., 10ம் தேதி நிறைவு விழா நடக்க உள்ளது.
400 பேர் நியமனம்
போட்டியில் பங்கேற்பதற்காக, 187 நாடுகளில் இருந்து வீரர் - வீராங்கனையர் 1,755 பேர்; குழுத் தலைவர்கள் 169; நடுவர்கள் 250 பேர் வந்துள்ளனர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், பல்வேறு துறை அமைச்சர்கள், 18 துறை செயலர்கள், டி.ஜி.பி., உள்ளிட்டோர் அடங்கிய குழுக்கள் செய்துள்ளன.
வெளிநாட்டு வீரர்களுக்கு உதவ, ஆங்கிலம் மற்றும் பிற சர்வதேச மொழிகள் அறிந்தோர், 400 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். போட்டியாளர்கள் தங்குவதற்கு, மாமல்லபுரம் மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள, 21 நட்சத்திர விடுதிகள், ஹோட்டல்கள் ஆகியவற்றில், 2,067 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. மற்றவர்கள், 17 விடுதிகளில் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுஉள்ளன.சென்னையின் அனைத்து பஸ் நிறுத்தங்களிலும், பூங்காக்களிலும், 'செஸ் ஒலிம்பியாட்' பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. முக்கிய அலுவலகங்களின் மாடியில், ராட்சத பலுான்கள் பறக்க விடப்பட்டுள்ளன.
வேட்டி கட்டிய குதிரை
தமிழரின் கலாசாரம், பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில், வேட்டி கட்டிய சதுரங்க குதிரை பொம்மைகள், 'தம்பி' என்ற பெயரில் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளன.கடந்த 19ம் தேதி டில்லி இந்திரா காந்தி உள் விளையாட்டரங்கில், பிரதமர் மோடி துவக்கி வைத்த, 'செஸ் ஒலிம்பியாட்' ஜோதி ஓட்டம், 26 மாநிலங்களில் உள்ள, 72 முக்கிய நகரங்களுக்கு சென்று, தமிழகம்
வந்துள்ளது.போட்டிகள் நடத்துவதற்காக, மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிராமத்தில், இரண்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் அரங்கம், 22 ஆயிரம் சதுர அடியில், 196 'செஸ் டேபிள் போர்டு'களுடன் அமைக்கப்பட்டு உள்ளன. இரண்டாவது அரங்கத்தில், 52 ஆயிரம் சதுர அடியில், 512 செஸ் டேபிள் போர்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.முதல் அரங்கில், 49 அணிகள்; இரண்டாவது அரங்கில், 128 அணிகள் விளையாட உள்ளன. ஒரு நாளைக்கு, 177 அணிகள் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 122 ஆண்கள் அணிகள், 102 பெண்கள் அணிகள் பங்கேற்கின்றன. இந்தியாவில் இருந்து மூன்று அணிகள் பங்கேற்கின்றன. மருத்துவ உதவிக்கு போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுஉள்ளன.செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழா, இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடக்கிறது. மாலை 3:00 மணி முதல் கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. துவக்க விழாவில் பங்கேற்பதற்காக, குஜராத் மாநிலம், ஆமதாபாதில் இருந்து, மதியம் 2:20 மணிக்கு, ராணுவ விமானத்தில் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். மாலை 4:45 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமரை, முதல்வர் ஸ்டாலின், கவர்னர் ரவி மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்க உள்ளனர்.
![]()
|
வரவேற்பு
மாலை 5:25 மணிக்கு, விமான நிலையத்தில் இருந்து, ஹெலிகாப்டரில் அடையாறு ஐ.என்.எஸ்., கடற்படை தளத்துக்கு செல்கிறார். அங்கிருந்து காரில் விழா நடக்கும் நேரு உள் விளையாட்டுஅரங்கம் செல்கிறார். வழி நெடுகிலும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தலைமையில், பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன், பா.ஜ., சார்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. மாலை 6:00 மணிக்கு விழா துவங்குகிறது. பிரதமர் நரேந்திரமோடி, செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஏற்றி வைத்து, போட்டிகளை துவக்கி வைக்க உள்ளார்.
கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.இரவு 7:30 மணிக்கு விழா நிறைவடைந்ததும், பிரதமர் காரில் கவர்னர் மாளிகை செல்கிறார். அங்கு இரவு தங்குகிறார். முக்கிய பிரமுகர்கள், பிரதமரை சந்தித்து பேச உள்ளனர். மறுநாள் காலை, அண்ணா பல்கலை 42வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறார். அன்று காலை 11:50 மணிக்கு, சென்னையில் இருந்து ஆமதாபாத் செல்கிறார்.பிரதமர் வருகையை ஒட்டி, சென்னையில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. - நமது நிருபர் -