வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான சலுகையை பெறுவதற்கான வயது வரம்பை 70 ஆக உயர்த்தவும், குளிர் சாதன வசதி அல்லாத பெட்டிகளுக்கு மட்டும் சலுகை வழங்கவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரயில் டிக்கெட் கட்டணத்தில் மாற்றுத் திறனாளிகள் உட்பட பல்வேறு பிரிவினர்களுக்கு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இது போல, 50 விதமான சலுகைகள் நடைமுறையில் உள்ளன. இவற்றின் வாயிலாக, ரயில்வே நிர்வாகத்துக்கு ஆண்டுக்கு 2,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கான சலுகையில், 60 வயதை கடந்த ஆண் மற்றும் திருநங்கை, நம்பிகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் 40 சதவீதமும்; 58 வயதை கடந்த பெண்ணுக்கு 50 சதவீதமும் சலுகை வழங்கப்பட்டு வந்தது.
மூத்த குடிமக்களுக்கான சலுகையை நிறுத்தக்கோரி பல ஆண்டுகளாகவே கோரிக்கைகள் வலுத்து வந்தன. கொரோனா ஊரடங்கின் போது ரயில்வே நிர்வாகம் மிகப்பெரிய இழப்பை சந்தித்தது. அந்த நேரத்தில், மூத்த குடிமக்களுக்கான சலுகையை ரயில்வே நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மூத்த குடிமக்களுக்கான சலுகையை திரும்ப தருமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இது தொடர்பாக பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரிலும் கேள்வி கள் எழுப்பப்பட்டன.
![]()
|
இந்நிலையில், ரயில் கட்டணத்தில் மூத்த குடிமக்களுக்கான சலுகையை பெறுவதற்கான வயது வரம்பை ஆண் - பெண் இருவருக்கும் 70 ஆக உயர்த்த, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சலுகையை குளிர் சாதன வசதி அல்லாத பெட்டிகளுக்கு மட்டும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதோடு, 'பிரீமியம் தத்கல்' டிக்கெட் முன்பதிவு வசதி தற்போது 80 ரயில்களில் மட்டுமே உள்ளது. இதை, அனைத்து ரயில்களிலும் அறிமுகப்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ரயில்களில் கடைசி நிமிட பயணத்தை திட்டமிடுபவர்களின் வசதிக்காக குறைந்த எண்ணிக்கையிலான டிக்கெட்களை, தத்கல் டிக்கெட் விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வதே, ப்ரீமியம் தத்கல் என அழைக்கப்படுகிறது. இதன் வாயிலாக ரயில்வே நிர்வாகம் அதிக லாபம் ஈட்டி வருகிறது.இந்த சலுகை மாற்றங்கள் குறித்து, ரயில்வே நிர்வாகம் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.